கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையை கண்டித்து, தமிழ் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக்குடிகள். அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு.
பாரம்பரியமாகவே மத அனுஷ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ்த் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.
அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ்த்தேசிய இனம் தொடர்ந்தும் போராடிவருகின்றது.
அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப் பின்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகப் போராடி மரணித்துப் போனவர்களைத் தமிழ் மக்கள் அஞ்சலிக்கக்கூடாது என்பதற்காக, அரசு பொய்யான தவறான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கி, தமக்காக மரணித்துப் போனவர்களுக்கு அஞ்சலிப்பதற்குத் தடையினைப் பெற்றிருந்தார்கள் .
அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டிற்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..