பொதுச்சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பிய கொரோனா நோயாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பண்டாரகம, அட்டலுகம பகுதியில் உள்ள 25 கொரோனா தொற்றாளர்களையும் வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பித்தன.
நேற்று முன்தினம் (2) வைத்தியசாலை செல்ல மறுத்த கொரோனா நோயாளியொருவர் தகராற்றில் ஈடுபட்டார். சுகாதார பரிசோதகர்கள் வாகனத்தில் ஏறியதும், வாகன கதவை திறந்து “இந்தா.. நீயும் கொரோனாவை வாங்கு“ என கூறி, சுகாதார பரிசோதகரின் முகத்தில் அவர் எச்சில் உமிழ்ந்தார்.
இதையடுத்து, 2 பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அம்யூலன்ஸ் சாரதி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு்ளனர்.
அவரும், வேறு 25 கொரோனா நோயாளிகளும் கண்டறியப்பட்ட தினத்தில், அவர்களை வைத்தியசாலைக்கு மாற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து, கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகளில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஏனைய சுகாதார தரப்பினர், பிரதேசசபையினர் ஒதுங்கியுள்ளனர்.
எச்சில் உமிழ்ந்த கொரோனா தொற்றாளர் எந்த அறிவுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல், அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார்.
ஏற்கனவே அதி அபாய வலயமாக மாறிவிட்ட அட்டலுகம, மேலும் மோசமடையாமல் துரித நடவடிக்கையெடுத்த காவல்துறை, இன்று அந்த நபரை கைது செய்து, பாணந்துறை நீதிவான் முன்னிலையில், ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் முற்படுத்தினர்.
அவர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கொழும்பில் உள்ள வெலிக்கட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
0 Comments
No Comments Here ..