29,Apr 2024 (Mon)
  
CH
கட்டுரைகள்

பெற்றோரின் வயதும் குழந்தையின் ஆரோக்கியமும்

தம்பதியினர் பெற்றோராகும் வயது குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களைப் பொறுத்தவரை குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பிரச்சனைகளைத் தடுக்க பெற்றோராகும் வயது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இன்றைய இயந்திரமயமான நவீன உலகில் படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் நல்ல நிலையை அடைந்த பிறகு தான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் ஆண்களும் பெண்களும் அதிகம். இதனால் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது என்று பார்த்தால் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது.மேலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

1970 களில் கிட்டத்தட்ட 21 வயதில் முதல் குழந்தை பெற்றனர். ஆனால் இப்போது அது 25 – 35 என அதிகமாகிக் கொண்டே போகிறது.இந்த வயது வித்தியாசம் ரொம்ப பெரியது இல்லை எனத் தோன்றினாலும் உண்மையில் பெற்றோரின் வயது அதிகரிக்கும் போது, அது பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் தான் ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பெற்றோராகும் வயது குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

நரம்பியல் குறைபாடுகள்

2009 ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி ஒரு ஆண் அதிக வயதில் தந்தையாகும் போது அவரது குழந்தைக்கு நுட்பமான நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம். இதனை தெளிவுபடுத்த ஆராய்ச்சியாளர்கள் மறு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர். 8 மாத குழந்தைகள், 4 வயது, 7 வயது குழந்தைகளைக் கொண்டு அதாவது சுமார் 56,000 குழந்தைகளுக்கு அறிவாற்றல் திறமை சோதனைகள் நடத்தப்பட்டன. அதாவது சிந்தனை, நினைவாற்றல், கற்றல், கவனம், புரிந்துகொள்ளல், பேசுதல் மற்றும் வாசித்தல், திறன்களைக் கையாளுதல் போன்ற திறமைகளை சோதனை செய்தனர். சில அசைவு சார்ந்த செயல்பாடுகளும் (Motor Skills) சோதனையில் இடம்பெற்றன. ஆய்வின் முடிவில் தெரிந்தது என்ன என்றால் அதிக வயதில் தந்தையானவர்களின் குழந்தைகள் அசைவு சார்ந்த செயல்பாடு சோதனைகளை தவிர மற்ற எல்லா சோதனைகளிலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றனர். அதே சமயம் அதிக வயதில் தாயான பெண்களின் குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றனர். பொதுவாக ஒரு ஆண் எந்த வயதில் தந்தையானாலும் அதனால் குழந்தைக்கு பாதிப்பில்லை என்று தான் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆய்வின் மூலம் அது தவறு என்பது நிரூபணமாகி உள்ளது. மற்றுமொரு ஆய்வு, அதிக வயதில் தந்தையாகும் போது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறது.

அதிக வயது

சமீப காலமாக பலர் அதிக வயதில் திருமணம் செய்து கொள்வதால் தந்தையாகும் வயது இன்னும் அதிகமாகிறது. இதனால் பிறப்பு குறைபாடுகள், குறை பிரசவம், குழந்தையின் குறைந்த எடை என பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அதே போல் ஒரு பெண் அவரது அதிக வயதில் அதிக படிப்பு, சிறந்த உறவு முறை, பொருளாதார முன்னேற்றம் என சிறந்து விளங்கினாலும், குறைவான கருத்தரிக்கும் வாய்ப்பு, பேறு கால வலிப்பு நோய், உயர் இரத்த அழுத்தம், மற்றும் பிறப்புறுப்பு நீரிழிவு போன்ற உபாதைகளுக்கான வாய்ப்புகளையும் கொண்டிருப்பார் என்பதே உண்மை.

இளம் வயது

மிக இள வயதில் தாயாவதாலும் பல பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது. 25 வயதுக்கு உட்பட்ட தாய் மற்றும் அவர்களது குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், அந்தக் குழந்தைகள் உயரம், உடல் பருமன் மற்றும் சில ஆரோக்கிய குறைபாடுகளுடன் இருந்தன. மேலும் கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு ஏன் இறப்பிற்கான வாய்ப்புகளும் உண்டு.

மனரீதியான விளைவுகள்

பெற்றோரின் வயதைப் பொறுத்து குழந்தைகளிடம் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தது தான். சரி, மன ரீதியாக ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? என்றால் அதற்கான பதில் ஆம் என்பது தான். இதைக் கண்டறிய சில ஆய்வுகள் நடத்தப்பட்டன.

18 – 21 வயதுகளில் முதல் குழந்தை பெரும் போது அவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாவதால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இந்த வயது தாய்மார்களில் சுமார் 28 முதல் 48 சதவிகிதம் பேர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல் 35 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெரும் போதும் இந்த மன அழுத்த பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.

50 வயதுக்கு மேல் பெற்றோராகும் போது, பெற்றோர்கள் குழந்தையை பேணிக்காத்து வளர்க்க வேண்டியதற்கு பதிலாக குழந்தை பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டி வரும். பெற்றோருக்கு குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய பயம் வந்துவிடும். குழந்தைகள் தனது வயதான பெற்றோரை எண்ணி மன அழுத்தம் மற்றும் மன வருத்தம் அடையலாம்.

ஆற்றல்

பொதுவாக அதிக வயதில் பெற்றோராகும் போது அவர்கள் மனதளவில் தயாராக இருப்பார்கள். வயதாகும் போது அவர்களது சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, குழந்தையுடன் பேசும் திறன் என எல்லாமே நன்றாக இருக்கும். அவரது படிப்பு, சிறந்த வேலை, சிறந்த சமூக உறவு, பொருளாதார வசதி மற்றும் பொறுப்பான குணங்களால் கர்ப்பத்தின் போது முழு கவனத்துடன் இருப்பார். அதனால் நல்ல முறையில் குழந்தை பெற முடியும். அதோடு குழந்தைக்கு ஆதரவும் ஊக்கமும் வழங்க முடியும். அனுபவம் அதிகமாகும் போது அலுவலக வேலைகளை எளிதில் முடிக்கலாம். தேவைப்பட்டால் விடுப்பும் எடுக்க முடியும். மேலும் வயதான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனுபவ மற்றும் அறிவை அதிகமாக வழங்க முடியும். ஆனால், இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் பெற்றோரிடம் காணப்படும் குறைவான ஆற்றல். அதனால் குழந்தைகளுடன் அதிம் ஓடி விளையாட முடியாது. படிப்பில் கூட உதவ முடியாத நிலை ஏற்படலாம். அதோடு சரியாக வளர்க்க முடியாததால் விருப்பப்பட்டாலும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வார்கள்

இள வயது பெற்றோர் குழந்தைகளுடன் ஆற்றலுடன் விளையாட முடியும் என்றாலும் அவர்கள் குழந்தைகளுக்கு சமூக அனுபவம் தாமதமாகவே கிடைக்கும்.

வியக்கத்தக்க வகையில் ஒரு ஆய்வில் செயற்கை முறையில் குழந்தை பெற்றவர்களை பொறுத்தவரை தாய் தந்தையின் வயது என்பது குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்பது அறியப்பட்டது. எந்த வயதுடையவர்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றாலும் குழந்தைக்கு எவ்வித பிரச்னைகளும் ஏற்படுவதில்லை.

2017 ஆய்வு

சுமார் 15,000 இரட்டையர்களைக் கொண்டு நடத்தப்பட்ட 2017 ஆய்வில் நடத்தை, சக வயது குழந்தைகளுடன் பழகுவது மற்றும் சமூக திறமைகள் போன்றவை சோதிக்கப்பட்டன. 25 வயதுக்கு உட்பட்ட அல்லது 51 வயதுக்கு மேற்பட்ட தந்தைகளின் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட எல்லா சோதனைகளிலும் பின் தங்கியிருந்தனர். இது குறித்து இந்த ஆய்வை நடத்திய Dr. Magdalena Janecka கூறுகையில் மிக இளைய அல்லது அதிக வயதில் தந்தையானவர்களின் குழந்தைகள் ஆட்டிசம் அறிகுறி இல்லாத போதும் சமூக சூழ்நிலைகளை கையாளுவது அவர்களுக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழலை விட மரபணு காரணிகள் தான். இந்த மரபணு பிரச்சனைகள் இள வயது தந்தைகளின் குழந்தைகளை விட, அதிக வயதில் தந்தையானவர்களின் குழந்தைகளிடமே காணப்பட்டன.

ஏற்ற வயது

107 பேரை மட்டுமே கொண்டு நடத்திய ஒரு சிறிய ஆய்வில் 40 வயதில் முதல் குழந்தை பெற்ற பெற்றோர்கள் பலர், அவர்கள் 5 முதல் 10 வருடங்களுக்கு முன்பே குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 80% தாய்மார்களும் 70% தந்தைகளும் 30 வயதில் குழந்தை பெறுவதே சிறந்தது என்கிறார்கள். பொதுவாக 30 வயதில் மனதளவில் தயாராக இருப்பார்கள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைகளும் இருக்காது. 20 வயதை விட 30 வயதில் நிச்சயம் சுய விழிப்புணர்வு அதிமாக இருக்கும். அதனால் பெண்கள் 25 – 30 வயதிலும், ஆண்கள் 30 வயதிலும் பெற்றோராவது சிறந்தது.

உண்மையில் பெற்றோராகும் ஒவ்வொரு வயதிலும் அதற்கே உரிய நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. அதிலும் ஒவ்வொருவரின் சூழ்நிலைக்கேற்ப நிச்சயம் மாறுபடும். மிக இளைய அல்லது அதிக வயதில் பெற்றோராகும் போது உயிரியல் மற்றும் உளவியல் ஆபத்து கண்டிப்பாக அதிகமாக இருக்கும். இவற்றை கருத்தில் கொண்டு பெற்றோராகும் வயதை தீர்மானிப்பது சிறந்தது.





பெற்றோரின் வயதும் குழந்தையின் ஆரோக்கியமும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு