18,Apr 2024 (Thu)
  
CH
கட்டுரைகள்

கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கை

உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இறந்த உடல்களில் இருக்கும் நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உணவாக உட்கொண்டு நோய் பரவலை தடுக்கும் ஆற்றல்மிக்க பாறு கழுகுகளின் இறப்பு உடனடியாக மனிதர்களை பாதிக்காவிட்டாலும், எதிர்காலத்தில் மனிதர்களை கொல்லும் நோய் கிருமி மற்றும் நுண்ணுயிர்கள் பரவுவதற்கு காரணமாக அமையலாம் என எச்சரிக்கின்றனர் பறவையின ஆராய்ச்சியாளர்கள்.

பாறு கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் எழுதியுள்ள சூழலியல் செயற்பாட்டாளர் பாரதிதாசன் விரிவான பல தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

“வானில் ஒரு இடத்தில் மட்டும் பாறு கழுகுகள் வட்டமடிப்பதை வைத்தே, அங்கு ஏதோ விலங்கு செத்துக்கிடக்கிறது என வனத்தை ஒட்டி வசிக்கும் ஊர் மக்களும், வனத்துறையினரும் தெரிந்து கொள்வார்கள். ஆனால், இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் இறந்த விலங்குகள் குறித்த தகவல் கிடைப்பதே தற்போது சவாலாக மாறியுள்ளது. இறந்த உடலை உட்கொண்டு அதில் உள்ள நோய் கிருமிகளை அழிப்பதால், பாறு கழுகுகளை ‘ஆகாய டாக்டர்’ என்றே அழைக்கலாம்.”

“உருவில் மிகப்பெரிய பறவைகளுள் ஒன்றான பாறு கழுகுகளில் 23 வகைகள் உள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் பாறுகள் மோப்பத்திறன் இல்லாதவை. இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இவற்றில் வெண்முதுகுப்பாறு, கருங்கழுத்துப்பாறு, மஞ்சள்முகப்பாறு, செந்தலைப்பாறு எனும் நான்கு வகை பாறு கழுகுகள் பெரும்பாலும் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்துமே அழியும் தருவாயில் இருக்கின்றன. இவை தவிர ஊதாமுகப் பாறு வகையும் தமிழகத்தில் அரிதாக காணப்பட்டதாக பதிவுகள் உள்ளது. இவை அனைத்துமே கூட்டமாக வாழக்கூடிய தன்மை கொண்டவை.”

“தனது கூரிய அலகால், செந்தலைப் பாறு சடலத்தை கிழித்து அதற்குத் தேவையானவற்றை உண்டுவிட்டு மற்றவை எளிதில் அனுகத் தேவையான வழியை ஏற்படுத்தித் தரும். அதன்பின் வெண்முதுகுப் பாறு வரும். அது சடலத்தின் உடல் துவாரங்கள் வழியாக அலகை உள்ளே நுழைத்து சதையை பிய்த்து உண்ணும். கடைசியாக மஞ்சள் முகப் பாறு வந்து மிச்சம் மீதமிருக்கும் கழிவையும் எச்சத்தில் இருக்கும் புழுக்களையும் உண்ணும். பெரும்பாலும், இந்த வரிசையில் தான் பாறுகள் உணவை பங்கிட்டுக்கொள்ளும். இரை உண்டபின் முதல் வேலையாக அருகில் உள்ள ஓடையில் நன்கு குளித்து இறகுகளில் ஒட்டியிருக்கும் இரத்தக்கறைகளைக் கழுவி இறகுகளைத் தூய்மைப் படுத்திக்கொள்ளும். இவ்வாறு பாறு கழுகுகளின் இரை உண்ணும் பாங்கு தனித்துவம் வாய்ந்தது” என்கிறார் பாரதிதாசன்.

இவர் கடந்த இருபது ஆண்டுகளாக ‘அருளகம்’ என்ற அமைப்பை உருவாக்கி பாறு கழுகுகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அழுகிய நிலையில், நோய் தொற்று உடைய சடலங்களை உண்டாலும் அவற்றை செரிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த அமிலங்கள் பாறு கழுகுகளின் வயிற்றில் இருப்பதாக கூறுகிறார் இவர்.

“நாள்பட்ட அழுகிய இறைச்சியை உண்டாலும் தொற்று நோய்வாய்ப்பட்டு இறந்த கால்நடைகளை உண்டாலும் பாறுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. குறிப்பாக அடைப்பான் (Anthrax), கழிச்சல் (Cholera), காணை நோய் (Foot and Mouth Disease), வெறிநோய் (Rabies), கோமாரி நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் இதன் வயிற்றில் சுரக்கும் அமிலம் செயலிழக்கச் செய்து விடுகிறது. இவற்றிடமிருந்து எந்த நோயும் பிற உயிரினங்களுக்கும் பரவுவதில்லை. இதனால் மனிதர்களை தாக்கும் கொள்ளை நோய்கள் பரவுவது தடுக்கப்படுகின்றது.

மேலும் காட்டில் விலங்குகள் நீர்நிலைகளுக்கருகில் இறக்க நேர்ந்தால் அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து அங்கு தாகம் தணிக்க வரும் மான்கள், யானைகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. அந்த ஆபத்திலிருந்து இவை மறைமுகமாக விலங்குகளையும் காக்கின்றன.”

“1950களில் சென்னையில் காகங்களின் எண்ணிக்கையை விட பாறு கழுகுகள் அதிகமாக காணப்பட்டதாக, மூத்த பறவை ஆராய்ச்சியாளர் நீலகண்டன் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, பாறு கழுகள் எனும் பறவை இனமே அழியும் தருவாயில் உள்ளது. உணவுத்தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு செலுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகள் மற்றும் விஷம் வைத்து விலங்குகளை கொல்வது போன்ற காரணங்களால் தான் பாறுக்கள் இறக்க நேரிட்டதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இயற்கையின் உணவுச் சங்கிலியில் பாறு கழுகுகள் முக்கியமானவை. அவற்றின் இறப்பு, நோய் பரவலை உருவாக்கி எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பேராபத்தாக அமையும்” என எச்சரிக்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் பாரதிதாசன்.

உடல் அமைப்பு மட்டுமின்றி வசிப்பிடத்தை உருவாக்குவதிலும் பாறுகள் தனித்துவம் வாய்ந்தவை என்கிறார் மாயாறு பகுதியில் உள்ள பாறு கழுகுகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் பைஜூ.

“கருங்கழுத்துப்பாறுகள் பாறைகளில் உள்ள இடுக்குகளில் முட்டையிட்டு வசிக்கக் கூடியவை. வெண்முதுகுப்பாறுகள் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்க கூடிய நீர் நிலைகளின் அருகில் உள்ள உயரமான மரங்களில் வசிக்கும். குறிப்பாக, நீலகிரியின் மாயாறு வனப்பகுதியில் உள்ள நீர்மத்தி மரம் மற்றும் காட்டு மாமரம் ஆகியவற்றில் இவை காணப்பட்டுள்ளன. இந்த மரங்களின் உயரம் சுமார் நாற்பது முதல் அறுபது அடி வரை இருக்கும். நீரோட்டம் உள்ள பகுதியில் இருப்பதால் மரங்களின் இலைகள் பசுமையாகவே இருக்கும். அவற்றை பயன்படுத்தி மென்மையான கூட்டை உருவாக்கி பாறு கழுகுகள் அதில் முட்டையிட்டு பாதுகாக்கும். வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பாறுகள் முட்டையிடும். மேலும், இவை வசிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மனிதர்கள் வராத இடமாகவே உள்ளன. அவை கூடு கட்டியிருக்கும் பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் இருந்தால் வேறு இடத்திற்கு வசிப்பிடத்தை மாற்றிவிடுகின்றன.”

“உணவுக்காக பாறு கழுகுகள் 2௦௦ முதல் 250 கி.மீ தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டவை. இவை வானில் இருந்து நிலப்பகுதியை பார்வையிட்டு, சடலங்களை கண்டறிந்து உணவாக எடுத்துக் கொள்ளும். கடந்த 20 ஆண்டுகளாக சீமைக்கருவேலம் போன்ற அடர்ந்த தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நிலத்தில் உள்ள சடலங்களை பாறுகளால் மேலிருந்து கண்டறிய முடியவில்லை. இவ்வாறு நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பாறு கழுகுகளை பாதிக்கின்றன”

“1990களில் மாயாறு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாறுகள் பதிவாகியுள்ளன. இன்று இப்பகுதிகளில் வெறும் 300 பாறுகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பாறுகளின் எண்ணிக்கை 99 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த பேரழிவிற்கு முக்கிய காரணம், கால்நடைகளுக்கு விஷம் வைத்து கொல்லும் முறை.

விஷ பாதிப்புகள் உள்ள சடலத்தை உண்பதால் பாறுக்களும் இறக்கின்றன. இந்திய அளவிலும் பாறுக்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் கால்நடைகளுக்கு செலுத்தப்படும் டைக்குளோபினாக் மற்றும் இதர மருந்துகள் தான்” என்கிறார் ஆராய்ச்சியாளர் பைஜு.

இயற்கைப் பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியமான International Union for Conservation of Nature (I.U.C.N) என்ற அமைப்பு வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செந்தலைப் பாறு, வெண்கால் பாறு ஆகிய 4 வகைப் பாறு கழுகுகள் உலகளவில் அற்றுப் போகும் நிலையில் உள்ள பட்டியலில் (Critically Endangered) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

மஞ்சள் முகப்பாறுக்களின் எண்ணிக்கை பிற நாடுகளில் கூடுதலாக இருப்பதால் அடுத்த படிநிலையிலுள்ள அரிய நிலையிலுள்ளவை (Endangered) என இவ்வகையை பட்டியலிட்டுள்ளது.

தமிழக அளவில் பட்டியல் தயாரித்தால் மஞ்சள் முகப்பாறுவும் அற்றுப் போகும் பட்டியலில் இடம்பெறும் எனவும், மொத்த தமிழகத்திலும் இவை ஒற்றை எண்ணிக்கையில் தான் இருப்பதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறு கழுகுகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக அமைந்த டைக்குளோபினாக் மருந்து தடை செய்யப்பட்டுள்ளபோதும் மற்ற மருந்துகளின் தாக்கத்தால் பாறுகளின் இறப்பு தொடர்ந்து வருவதாக தெரிவிக்கிறார் சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சூழல் நச்சுயியல் பிரிவில், மூத்த முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிவரும் முரளிதரன்.

“மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைக்குளோபினாக் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இது போன்ற ஆறு வகையான மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. டைக்குளோபினாக் மருந்து நோயுற்ற கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது. அவை உயிரிழந்த பின்னர் பாறுகள் அவற்றை உணவாக உட்கொள்கின்றன. இதனால், டைக்குளோபினாக் மருந்து பாறுகளின் சிறுநீரகத்தை பாதிப்புக்குள்ளாக்கி செயலிழக்க வைக்கிறது. இந்த காரணத்தால் 2006ம் ஆண்டு டைக்குளோபினாக் மருந்தை கால்நடைகளுக்கு செலுத்துவது தடை செய்யப்பட்டது.” என்கிறார் இவர்.

பாறு கழுகுகளை பாதுகாக்க டைக்குளோபினாக் மருந்தைத் தடை செய்யப்பட வேண்டும் என்று பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, 2006 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசு தரப்பில் அனைத்து மாநில தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் டைக்குளோபினாக் மருந்து குறித்த முதல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில், பாறுகள் பெருமளவு இறக்கக் காரணம் டைக்குளோபினாக் மருந்து தான் என்றும் இதனால் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் கால்நடைகள் பயன்பாட்டிற்கு இம்மருந்தை உற்பத்திசெய்ய வழங்கப்பட்ட அனுமதியை மூன்று மாதத்திற்குள் படிப்படியாக நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டு, 26 மாதங்களுக்குப்பின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்தியாவைத்தொடர்ந்து நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், கம்போடியா ஆகிய நாடுகளிலும் டைக்குளோபினாக் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“டைக்குளோபினாக் தடைக்கு பின்னர் பாறுகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் என நம்பியிருந்தோம். ஆனால், நிமிசுலாய்ட்ஸ் போன்ற பிற மருந்துகளாலும் பாறுகள் உயிரிழப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் பாறுகளின் சிறுநீரகத்தை பாதித்து ஒரு வாரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.”

“மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தையை கொல்வதற்காக வைக்கப்படும் விஷம் தடவிய சடலங்களை நேரடியாக சாப்பிடுவதாலும், விஷ பாதிப்பால் உயிரிழந்த விலங்குகளை உட்கொள்வதாலும் பாறுகள் உயிரிழக்கின்றன” என்கிறார் முரளிதரன்.

பாறு கழுகுகளை பாதுகாத்து, அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் முதுமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார் மசினகுடி கோட்டத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த்.

“முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் பாறுகள் காணப்படுகின்றன. அவற்றை பாதுகாக்கும் நோக்கில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளோம். இத்திட்டத்தில், பாறுகள் கூடுகட்டும் மர வகைகளை கண்டறிந்து அந்த வகை மரங்களை வளர்ப்பது, அவற்றின் கூடுகளையும், முட்டைகளையும் பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காயம்பட்ட பாறுகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதி மற்றும் அவற்றுக்கென பிரத்யேக இனப்பெருக்க மையத்தை உருவாக்குவதற்கான திட்டத்தையும் இணைத்துள்ளோம்” என்கிறார் ஸ்ரீகாந்த்.

உணவுத்தட்டுப்பாடு, விஷம் தடவப்பட்ட உணவு, மாறிவரும் நிலப்பரப்பு, நச்சு மருந்துகள் என பாறு கழுகுகளின் இறப்புக்கான காரணங்களை தடுத்து நிறுத்த, இயற்கையின் உணவுச் சங்கிலிக்குள் உட்பட்ட மனிதர்களுக்கும் பொறுப்பு உண்டு என தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.




கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு