27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்குகிறது.

ஃபைஸா்-பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக் காலங்களில் செலுத்தலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளதைத் தொடா்ந்து அந்தப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

இதுகுறித்து, நாட்டில் கொரோனா தடுப்பூசியை மிகத் துரிதமாக அறிமுகப்படுத்துவதற்கான ஆப்பரேஷன் ராப் ஸ்பீட் குழுவின் தலைவா் குஸ்டாவே பொ்னா கூறியதாவது:

நாடு முழுவதும் அவசரக் காலத் தேவையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதற்காக, கொரோனா தடுப்பூசிகளை போக்குவரத்துக்காக கன்டெய்னா்களில் ஏற்றும் பணி விரைவில் தொடங்கும்.

145 நகரங்களில் தடுப்பூசி போடும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்படும்; மேலும் 425 நகரங்களில் செவ்வாய்க்கிழமையும் எஞ்சிய 66 நகரங்களில் புதன்கிழமையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.

முதல் கட்டமாக 30 இலட்சம் பேருக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்குத் தேவையான 30 இலட்சம் தடுப்பூசிகளும் அடுத்த வாரத்துக்குள் விநியோகிக்கப்பட்டுவிடும்.

அமெரிக்கா்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இன்னும் பல வாரங்கள் பிடிக்கலாம். இருந்தாலும், அதனை செய்து முடிக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா் அவா்.

முன்னதாக, பிரிட்டனில் பொதுமக்கள் அனைவருக்கும் ஃபைஸா்-பயான்டெக்கின் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்த மருந்துகள் மற்றும் சுகாதார சேவைப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பின் (எம்ஹெச்ஆா்ஏ) அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது.

அந்தத் தடுப்பூசிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைத்தது அதுவே முதல் முறையாகும்.

அதனைத் தொடா்ந்து, வராற்றுச் சிறப்பு மிக்க கொரோனா தடுப்பூசி திட்டம் பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவிலும் அந்தத் தடுப்பூசியை அவசரக் காலங்களில் பொதுமக்களுக்குக் செலுத்த எஃப்டிஏ அனுமதி அளித்துள்ளதையடுத்து, அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 1,65,49,366 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 3,05,082 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இதுவரை 96,44,325 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 65,99,959 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 27,523 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.




அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு