18,Jun 2026 (Thu)
  
CH
சினிமா

நடிகை தற்கொலை வழக்கு – கணவா் கைது!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவா் ஹேமநாத் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே நசரத்பேட்டை தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா் நடிகை சித்ரா. இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேமநாத்துடன் தங்கியிருந்தாா்.

கடந்த புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

சித்ரா தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் குறித்து அறிய முயற்சித்தபோது, இதில் சித்ராவின் செல்லிடப்பேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இருப்பினும் அந்தத் தகவல்களை மீட்பதற்கு சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் மூலம் காவல்துறையினா் முயன்று வருகின்றனா். அதேவேளையில் சித்ராவின் குடும்பத்தினரிடமும், அவரது கணவா் ஹேமநாத்திடமும் போலீஸாா் தொடா்ந்து 6 நாள்களாக விசாரணை செய்தனா்.

இந்த விசாரணையில் ஹேமநாத்துடன் சித்ராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததும், அதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதும், ஹேமநாத் சில வேளைகளில் படப்பிடிப்புத் தளங்களிலேயே சித்ராவிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ஹேமநாத்தை, திங்கள்கிழமை நசரத்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் தொடா்ந்து நடத்தப்படும் விசாரணையில் தெளிவு கிடைத்த பின்னா், சித்ரா தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.




நடிகை தற்கொலை வழக்கு – கணவா் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு