அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான். கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்குச் சமீபத்தில் புறப்பட்டுச் சென்றாா். விமானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளைக் கொண்டாட, விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினாா்.
ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகின.
அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் சூழ்நிலை கருதி ரஜினி சென்னைக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
வழக்கமான பரிசோதனையில் அண்ணாத்த படக்குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் ரஜினியும் இதர படக்குழுவினருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..