13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் அரசியல் கைதியின் பிள்ளைகள் உருக்கமான கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவரின் மகனான குகநாதன் கலையழகன் என்பவர், நான் மகிழ்வாக எனது கல்வியை தொடர நான்கு வயதில் என்னை விட்டு பிரிந்து சிறையில் வாடும் எனது அப்பாவை விடுதலை செய்யுங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றை நாட்டிலிருந்து விரட்டுவதற்கு மீட்டராய் இருங்கள் என அரசாங்கம் நாடு முழுவதிலும் அறிவுறுத்தல் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள நிலையில், சிறையிலுள்ள தனது கணவர் உள்ளிட்ட கைதிகள் ஒரே அறையில் உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் அரசியல் கைதியின் மனைவியான குகநாதன் யோகராணி தெரிவித்துள்ளார்.

தனது கணவனின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த மனைவியான குகநாதன் யோகராணி

“எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் கல்வித் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். மகள் தரம் எட்டில் கல்வி கற்கிறார். எனது கணவர் 2009 ம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று வருடம் பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டு ஒருவருட புனர்வாழ்வின் பின் 2013 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டு குடும்பவாழ்வில் இணைந்து இருந்தார்.

2013 ஆம் ஆண்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு தனது கணவர் விடுவிக்கப்பட்டபோதும் மீண்டும் நான்கு மாதங்களில் 4 ம் மாடியில் 6 நாட்களில் விசாரணை முடித்து விடுகிறோம் என அழைத்து சென்றவர்கள். தற்போது வரையில் அவரை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதியின் மனைவி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவரும் நிலையில் தனது கணவரையும் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறும் தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்தில் கொண்டு பிணையிலாவது தனது கணவரை விடுதலை செய்யுமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது கணவரை விடுவிக்குமாறு கடந்த மார்ச் மாதம் மாவட்ட அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குகநாதன் யோகராணி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மீண்டும் நொவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் செயலாளருக்கும், சிறைச்சாலை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நான்கு வயதில் தன்னை விட்டு பிரிந்து சிறையில் வாடும் தனது தந்தை தன்னுடன் இருந்தால் தான் மகிழ்ச்சியாக கல்வியைத் தொடரலாம் என அவரது மகன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை 4 மாத குழந்தையாக தனது தந்தையை பிரிந்த மகள் இன்று வரை தனது அப்பாவின் வருகைக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





முல்லைத்தீவில் அரசியல் கைதியின் பிள்ளைகள் உருக்கமான கோரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு