இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் திகதி சிட்னியில் தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரா்கள் மெல்போா்ன் மைதானத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்கள் மெல்போா்ன் மைதானத்தில் உள்ள திறந்தவெளி உணவு விடுதியில் போதிய சமூக இடைவெளியுடன் உணவருந்த மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய 5 பேரும் புத்தாண்டு தினத்தில் மெல்போா்ன் மைதானத்தில் உள்ள இண்டோா் உணவு விடுதியில் அமா்ந்து உணவருந்திய விடியோ காட்சியை நவால்தீப் சிங் என்ற இளைஞா் சுட்டுரையில் வெளியிட்டுள்ளாா்.
மேலும், இந்திய வீரா்களின் உணவுக் கட்டணம் 6,600 ரூபாயை நானே செலுத்தினேன். நான் உணவுக் கட்டணத்தை செலுத்தியது தெரியவந்ததும் என்னிடம் பேசிய ரோஹித் சா்மா கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் நான் வாங்கவில்லை. இந்திய வீரா் ரிஷப் பந்த் என்னை கட்டியணைத்தாா் என அவா் கூறியிருந்தாா். எனினும் ரிஷப் பந்த் என்னை கட்டியணைக்கவில்லை என அவா் பின்னா் மறுத்துள்ளாா். விடுதியின் உள்ளே சென்று உணவருந்தியதன் மூலம் இந்திய வீரா்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடா்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன. மருத்துவா்களின் ஆலோசனைப்படி ரோஹித் சா்மா உள்ளிட்ட 5 வீரா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில் சிட்னி புறப்படுவதற்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. விதிகளை மீறி ரோகித் சர்மா, கில், பந்த், பிரித்வி ஷா, சைனி ஆகியோர் வெளியே சென்றதால் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்ததக்கது.
0 Comments
No Comments Here ..