அமெரிக்கா பாராளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20 ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது பாராளுமன்ற கட்டடத்திற்கு வெளியே தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர்.
அவர்கள் கலைந்து செல்லாததால் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வன்முறையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் பொறுப்பில் உள்ள தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்சிடம், அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை செல்லாது என அறிவிக்கும்படி டிரம்ப் வலியுறுத்தினார். எனினும் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
அமெரிக்கா பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்களின் முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற கட்டட முற்றுகை போராட்ட வன்முறையை அடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..