28,Mar 2024 (Thu)
  
CH
கட்டுரைகள்

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பண்டிகை வரலாறு …

ஒவ்வொரு வருடமும் மனிதர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வுகளை வடுக்களை தந்து விட்டு செல்கின்றது. அது ஒரு பக்கம் இருந்தாலும் பண்டிகைகள் என்பது வருடங்களில் தவிர்க்க முடியாதவை அது ஒவ்வொரு மதத்தினருக்கும் உரிய பண்டிகைகள் பிறக்கின்றன கொண்டாடுகின்றமோ இல்லையோ ஆனால் வரவேற்க தவறுவதில்லை 

அதுவும் தமிழர்களின் பல பண்டிகைகள் வரலாறு சொல்லும் நீண்ட பயணம் 

மேற்கத்திய நாடுகளில் "தேங்க்ஸ் கிவ்விங் டே" என்பது தான் பொங்கல் என்றால் இன்றைய ஐ.டி வாழ் தலைமுறைக்கு நன்கு புரியும் என்று கூறலாம். பண்டையக் காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகை தான் பொங்கல். 

பலருக்கு தெரியாத பொங்கல் பற்றிய புராணக் கதைகள்!!! விவசாயம் நடக்க முதல் காரணமாக இருக்கும் சூரிய ஒளி, அதற்காக தான் சூரியனுக்கு படையல் வைத்து சூரிய பொங்கல் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிறகு உழவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப்பொங்கல், பிறகு விவசாயத்தை செம்மையாக செய்யும் உழவர்களுக்கு உழவர் பொங்கல் என வரிசையாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.

அதில் முக்கியமான ஒன்றுதான் தைத்திருநாள் இந்தப் பண்டிகையை பொறுத்தவரை பல வரலாற்றுக்கதைகள் சொன்னாலும் மத பேதமின்றி பணக்காரன் ஏழை என்ற வித்தியாசமின்றி உலகில் வாழும் மக்கள் அனைவரையும் உயிர்காக்கும் உழவரின் உண்மைக்கதையும் கூட

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

    பொங்கல் என்பது தமிழ் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம் சங்க காலமான கி.மு 200-கி.மு 300 பார்த்து போகவேண்டும்.

பொங்கல் பற்றி சமஸ்கிருத புராணங்களில் திராவிட அறுவடைப் பண்டிகை என அறியப்பட்டாலும்,வராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்”என்றே நம்புகின்றனர்.அப்போதைய கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

தை நீராடலின் ஒரு பகுதியாக அக்கால பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.

பெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொங்கல் திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.

 போகித் திருநாள்:

      “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்மொழிக்கு ஏற்ப போக்கிதிருநாள் விளங்ககிறது. பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் விடும் நாளாக எண்ணப்படுகிறது.

போகியன்று வீட்டின் கூரையில் காப்புக்கட்டுவார்கள். அந்த நாளன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும்.

     போகி பற்றிய புராணக்கதை இது.தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் கும்பிட்டு வந்தனர்.இப்படி வணங்கி வருவது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.

கிருஷ்ணரும் ஆடு மேய்க்கும் நண்பர்களும் இன் இந்திர தேவனை வணங்க கூடாது என்று கூறினார்கள்.இந்திர தேவனுக்கு கோபம் வந்துவிட்டது.ஆகையால்,புயல் மழையை உண்டாக்கினார்.

தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.

3 நாட்கள் பெய்ததுமழை. தன் தவறை உணர்ந்தார் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.

அன்றுமுதல் இந்திரனை போற்றும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார்.இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ளது இந்த பண்டிகை.

 பொங்கலுக்கு செய்யும் ஆயத்தமங்கள்:

         பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசுகிறார்கள்.இது கிராமங்களில் காணப்படும் அற்புதக் காட்சி.துன்பங்கள் வெளியேற்றப்படும் திருவிழா”போக்கி” என்றனர். இது காலப்போக்கில் “போகி” என்று மாறிவிட்டது.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசி நாள் என்பதால் நடந்த நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றும் கூறுவர்.

 தைப்பொங்கல் இரண்டாம் நாள்:

       பெரும் பொங்கல் என்றழைக்கப்படும் பொங்கல் நாளன்று பெரியவர்களும்,சிறியவர்களும் விடியற்காலையில் எழுந்து நீராடிப் புத்தாடைகள் அணிவார்கள்.

இனிய விடியல் நாயகனுக்கு படையலிட பொங்கலுடன் வெற்றிலை,பாக்கு,தேங்காய் மற்றும் முக்கனிகளுடன்,இஞ்சியும்,மஞ்சளும்,கரும்பும் ஞாயிற்றுக்கு ஏற்ற அருகம்புல்லும், பூசணியும் முதன்மையான இடம் பெற்றுள்ளன. சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.

பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் கூடி

“பொங்கலோ பொங்கல்!பொங்கலோ பொங்கல்!”

என முழங்கி மனதில் நன்றி பொங்க ஞாயிறை வழிபடுவார்கள்.

“பொங்கலோ பொங்கல்!”

என்னும் வரிகளை ஔவையார்தான் கூறினார்.

விடியல் நாயகனுக்கு படையல்:

      3 தலைவாழை இலை இட்டு பழம்,கரும்பு முதலியவற்றை கொண்டு வணங்கி,தூபதீபம் காட்டி சூரியபகவானை போற்றி வணங்க வேண்டும். வழிபாடு செய்யும் போது குலதொய்வத்தையும்,முன்னோர்களையும் வணங்க வேண்டும்.

மாட்டு பொங்கல்:

     பட்டிப் பொங்கல் எனவும் கன்றுப் பொங்கல் எனவும் குறிப்பிடுவர். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி கூறவும்,பசுக்களில் கடவுள் இருப்பதால் வணங்கி வழிபடும் நாளாக திகழ்கிறது.

உழவர்கள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி,நெற்றியில் குங்குமம் வைத்து கழுத்தில் சலங்கைக்கட்டி பொங்கலிட்டு வணங்குவர்.

பச்சரிசி கோலமிட்டுப் புதுபானை பொலிவு பெற, அதனை மஞ்சள், இஞ்சியால் அலங்கரித்துச் செந்நெல் அரிசியும் செங்கரும்பின் சாற்றையும் கூட்டி படைப்பார்கள். அதற்கு இணையான சுவையுண்டோ .

 சிவபெருமானும், தந்தியும்:

    இது மாட்டுப் பொங்கல் பற்றிய புராணக்கதை.ஒருமுறை சிவபெருமான் நந்தியை பூமிக்குச் செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தனமும் எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடவும் கூறச் சொன்னார். ஆனால் நந்தியோ, தெரியாமல் தினமும் சாப்பிடவும், மாதத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் கூறினார்.

இதனால் சிவபெருமான் நந்தியை சபித்தார்.அதனை என்றுமே பூமியில் வாழுமாறும், அதிகமான உணவை உற்பத்தி செய்ய மனிதனுக்கு உதவ வேண்டும். அதற்காக நீ நிலத்தை உழுதல் வேண்டும் என சொன்னார்.அதனால் மாடு பொங்கலுடன் தொடர்புகொண்டுள்ளது.

 ஏறுதழுவுதல்:

       மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மதுரை,இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும், தமிழ்நாடு வட மாவட்டங்களில் எருதுகட்டு எனவும் வழங்கப்பட்டுத் தொன்றுதொட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற விழாவாக திகழ்கிறது.

 ஏறுதழுவுதல் பற்றிய சங்க இலக்கியம்:

      முல்லை நில மகளிரை மணக்க விரும்புவோர், அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்குவர். அதை அடக்கியவருக்கே அப்பெண்ணை மணம்முடித்து வைப்பர்.

காளைக்கு பயந்து பின்வாங்கும் ஆண்களை பெண்கள் மணக்கமாட்டர்கள்.

ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியங்கள் உணர்த்துகிறது. எட்டுத்தொகை நூலில் ஒன்றான கலித்தொகையில்,ஒரு பிரிவான “முல்லைக்கலி” உள்ளது.

அதில் காளையின் கொம்புகளுக்கு பயந்தவனை மறு பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம்.

இதை

      “கொல்லேற்றுக் கோடு அஞ்சு

       வானை மறுமனையும்

       புல்லாளே ஆய மகள்”

என்கிறது கலித்தொகை 

    காணும் பொங்கல்:

       காணும் பொங்கலை கன்னி பொங்கல் அல்லது கணப்பொங்கல் என்றும் அழைப்பார்கள். தம்மை சுற்றியுள்ள பெரியோர்களை,நண்பர்களை,  உறவினர்களை அவர்தம் இல்லம் சென்று பேசி அன்பொழுக உரையாடி மகிழ்தலே இத்திருநாளின் நோக்கம். இந்நாளில் இளம் பெண்களின் கோலாட்டம்,கும்மி முதலானவை இடம்பெறும்.உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் எனப் பல்வேறு வீரப் போட்டிகள் இடம்பெறும்.

 பொங்கல் விழாப் போல மற்ற விழாக்கள்:

      வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி கூறும் நாளாக உள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் இது” மகர சங்கராந்தி” எனவும் கொண்டாடப்படுகிறது.

மகரம் என்றால் சூரியன் என்பது பொருள். பகலவன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் ஆரம்பமாகிறது.எனவே இதனை மகர சங்கராந்தி எனவும் அழைக்கின்றனர்.

 சங்க இலக்கியங்களில் பண்பாட்டு பெருவிழா:

 “தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ”என கலித்தொகை.

 “தை இத் திங்கள் தண்கயம் படியும்”என நற்றிணை.

 “தை இத் திங்கள் தண்ணிய தரினும்”என்று குறுந்தொகை.

 பொங்கலை தற்போது கொண்டாடும் நாடுகள்:

     தைத்திங்கள் நாள்விழாவை தமிழர்களால் இந்தியா,இலங்கை,மலேசியா, சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை மறக்காமல் சந்தோசமாக கொண்டாடுவோம்.

அனைவருக்கும் மீண்டும் தமிழ்ஸ்4 செய்தி இணையத்தளத்தின் பொங்கல் வாழ்த்துக்கள்……





தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பண்டிகை வரலாறு …

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு