23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம்

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர்எழுச்சியாக திரண்ட

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் இதன்போது வாசித்துக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 2001ஆம் ஆண்டு முதலாம் மாதம் 17 ஆம் திகதி இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர்எழுச்சியாக திரண்ட நிகழ்வே பொங்குதமிழ் ஆகும்.

இதனை நினைவுபடுத்தும் முகமாக அப்போதைய யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நினைவு நாளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு-

பொங்கு தமிழ் நினைவு நாள் – 2021

முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்களது நினைவு உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலப் பின்னணியில் நாங்கள் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 இல் தமிழ் மக்கள் தங்களது இன உரிமைகளை வலியுறுத்தி உலகெங்கும் அவற்றை பறைசாற்ற மிகுந்த எழுச்சியோடு இராணுவ அச்சுறுத்தல் மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினார்கள். அவ்வாறாக அவர்கள் ஒன்றுகூடி வந்தபொழுது மேற்கொண்ட பிரகடனத்தை நாம் இங்கு கல்வெட்டாக வடித்து வருடா வருடம் நினைவு கூறுகின்றோம்.

தமிழ் மக்களது அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம்,

தமிழ்த் தேசியம் என்கின்ற விடையங்களை இந்த பிரகடனம் உள்ளடக்கி நிற்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த பொங்கு தமிழ் உலகின் பல நாடுகளிலும் அங்கங்கு வாழும் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் தமிழ் மக்களது அடிப்படை அபிலாசைகளை எடுத்துரைத்து வருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை இந்த பொங்கு தமிழ் நிகழ்வும், இங்கு நிறுவப்பட்டிருக்கும் பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டும் பறைசாற்றி நிற்கின்றது. காலாதி காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எடுத்துவந்த தமிழ்த்தேசிய நிலைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் நமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆகவே மீண்டும் ஒருமுறை இந்த வருடமும் சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம்,தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என மீண்டும் உரத்து ஒலிப்போம். என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு