கிளிநொச்சி சிவபுரம் கிராமத்து வீதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் மிகமோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் சிவபுரம் கிராமத்தில், அங்குள்ள மக்கள் தினமும் போக்குவரத்துச் செய்யும் வீதிகள் கவனிப்பாரற்ற நிலையில் நீண்டகாலமாகத் திருத்தியமைக்கப்படாது குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன. இவ்வீதியால் வெள்ளைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் முதற்கொண்டு பெருமளவான மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியபடியே பயணிக்கின்றார்கள்.
சிவபுரம் கிராமத்தில் 380 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் அரசினது கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் போது இக்கிராமம் உள்வாங்கப்படாது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம வாசிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது
சிவபுரம் கிராமத்து வீதிகளைத் திருத்தியமைப்பதற்காக என பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பிரதேச சபையினர் இக்கிராம வீதிகளைக் கடந்த காலங்களில் பல தடவைகள் பார்வையிட்டும் வீதிகளை அளவீடு செய்தும் சென்றுள்ளனர். ஆனால் இன்னமும் இக்கிராமத்து வீதிகள் திருத்தியமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும் கிராமத்து வீதிகளைத் திருத்தியமைப்பதற்கான திட்டத்திற்கு என்ன நடந்தது? அது எங்கு சென்றது? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துப் பிரிவினது கடந்த காலக் கலந்துரையாடல்களில் பரந்தன் சிவபுரம் கிராமம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றமை தொடர்பிலும் அக்கிராமத்திற்கு சீரான வடிகாலமைப்புக்களை ஏற்படுத்தி கிராமத்து வீதிகளைத் திருத்தியமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துமும் முன்வைக்கப்பட்டுக் கலந்துரையாடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிவபுரம் கிராமத்தில் குறைவான நிரப் பிரதேசத்திற்குள் பெருமளவான மக்கள் செறிந்து வாழ்கின்றமையைக் கருத்திற்கொண்டு இக்கிராம்தின் வீதி அபிவிருத்தி, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட சகல அபிவிருத்திகளையும் முன்னெடுத்து ஓர் மாதிரிக்கிராமமாக அமைப்பதற்கான முன்மொழிவுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட போதிலும் இன்றுவரை வீதி அபிவிருத்திகூட இன்றி அரசினது அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட கிராமமாகவே சிவபுரம் கிராமம் காணப்படுகின்றது.
சிவபுரம் வீதிகளால் தினமும் பெருமளவான மக்கள் பெருஞ்சிரமங்களின் மத்தியிலேயே பயணிக்கின்றனர். அவர்களில் பாடசாலைக்குச் செல்லும் கிராமத்து மாணவச் சிறார்கள் வெள்ளைச் சீருடையுடன் பல சிரமங்களை எதிர்நோக்கிய வண்ணமே சேறும் சகதியும் உள்ள வீதிகளால் பயணிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
பொறுப்பு வாய்ந்த துறைசார் உரியவர்கள் கவனம் செலுத்தி பரந்தன் சிவபுரம் கிராமத்து வீதிகளையும் உரியமுறைப்படி திருத்தியமைத்து மக்கள் சிரமமின்றிப் பயணிக்க ஏற்ற நடவடிக்கை எடுத்து உதவுமாறு கிராம மக்கள் கோரி நிற்கின்றனர்.
0 Comments
No Comments Here ..