24,Nov 2024 (Sun)
  
CH
உலக செய்தி

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப் எங்கு வசிக்கப்போகின்றார்..?

வெள்ளை மாளிகையை விட்டி வெளியேறிய டொனால்டு டிரம்ப் தமது மனைவி மெலானியா டிரம்ப் உடன் அவர் மரைன் ஒன் ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார்.

டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா ஆகிய இருவரும் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் எனும் ராணுவத் தளத்துக்கு சென்றார்கள்.

மரைன் ஒன் ஹெலிகாப்டரில் ஏறும் முன் அங்கு இருந்த செய்தியாளர்களிடம் மிகவும் குறுகிய நேரம் பேசினார் டிரம்ப்.

வெள்ளை மாளிகை உலகின் மிகச்சிறந்த வீடு," என்று அவர் அப்போது கூறினார்.

தனது மனைவி அருகில் இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு மிகச்சிறந்த நான்காண்டுகள் இங்கு இருந்தன; இதன்போது பலவற்றையும் சாதித்தோம். நாங்கள் அமெரிக்க மக்களை நேசிக்கிறோம். இது மிகவும் சிறப்பானது," என்று கூறினார்

அங்கு, டிரம்புக்கு இறுதியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு அமெரிக்க அதிபரின் ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் டிரம்ப் ஃபுளோரிடா கிளம்பினார்..

ஃபுளோரிடாவில் அமைந்துள்ள பாம் பீச் பகுதியில் இருக்கும் மாரா-லாகோ எனும் ரிசார்ட்டில் அவர் அதிபர் பதவிக்கு பிந்தைய காலத்தை கழிக்க உள்ளார்.

டிரம்ப், மெலானியா ஆகியோர் ஃபுளோரிடா சென்ற பின்பு அமெரிக்க அதிபர் பயணிப்பதற்கு என்றே பிரத்தேயேகமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மீண்டும் மேரிலாந்து திரும்பும்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்வில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளப்போவதில்லை.

எனினும், ஜோ பைடனுக்கு அவர் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்றுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட பின்பு அதிபர் பதவி ஏற்ற ஆண்ட்ரூ ஜான்சன்தான் கடைசியாக தனக்கு பின்பு பதவிக்கு வருபவரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாத அதிபர் ஆவார்.

டிரம்புக்கு வழங்கப்படும் இறுதி பிரியாவிடை நிகழ்ச்சியில் அவரது பதவிக்காலத்தில் துணை அதிபரான மைக் பென்ஸ் கலந்து கொள்ளவில்லை.

அவர் பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார்.

ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்தில், தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தமது பிரியாவிடை உரையாற்றிய டிரம்ப் தமது குடும்பத்தினர் மற்றும் அணியினருக்கு நன்றி கூறினார்.

தமது ஆட்சிக் காலத்தின் போது நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்று சிலவற்றை அவர் பட்டியலிட்டார்.

கடைசி சில நாட்களாக அவர் நல்ல மனநிலையில் இல்லை, எரிச்சலாக உள்ளார் என்பதுபோல சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று டிரம்ப் ஆற்றிய உரை அதற்கு முரணாக இருந்தது.

இன்றைய உரையின் போது அவர் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.அவரது ஆதரவாளர்களுக்கும் உற்சாக மூட்ட அவர் முயற்சித்தார்.

அவரது பிரியாவிடை உரை ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி போலவே இருந்தது. அது சோகமானதாக இல்லை.

ஏதாவது ஒரு வகையில் நாம் மீண்டு வருவோம் என்று தனது உரையில் இறுதியில் குறிப்பிட்ட அவர், "ஹேவ் எ க்ரேட் லைஃப்; வி வில் சீ யூ சூன்," என்று முடித்தார்.




வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப் எங்கு வசிக்கப்போகின்றார்..?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு