முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த கோரிக்கையை அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சீனி இறக்குமதி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில்,
வன்னி மாவட்டத்தில் அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளது. திடீர் திடீரென புத்த கோவில்கள் முளைப்பதும் அதனைத் தொடர்ந்து பிரச்சினைகள் வருவதும் தொடர்கின்றன.
முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுமுள்ளது. அதில் மக்களின் வழிபாட்டை தடுக்கக்கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு சில நாட்களுக்கு முன்னர் பொங்கல் வழிபாடு செய்ய சென்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது.
இந்த தொல்பொருள் ஆராய்ச்சியை ஏன் மறைமுகமாக செய்ய வேண்டும்? பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் வந்து ஆராய்ச்சி செய்யும் ஏற்பாட்டை அரசு செய்கிறது. நாம் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்குபற்ற வேண்டுமெனக் கோரினோம்
தலைவர் இரா.சம்பந்தன் இவ்விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் பேசியபோது யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க அவர் இணங்கியுள்ளார். இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாய்ப்பேச்சில் மட்டும் இருக்கக்கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..