காதலுக்கு கண் இல்லையென்று சொல்வார்கள்… அது உண்மைதான் போலுள்ளது. ஏனெனில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, கரம்பிடித்து, இல்லறம் இனிக்க வாழ்ந்து வரும் செய்தியை படித்தால் அப்படித்தானே தோன்றும்!
பேஸ்புக் மூலம் அறிமுகமான பாட்டியுடன் கடலை போட்ட இளைஞர் ஒருவர், அவரையே காதலித்து கை பிடித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ். பாட்டிக்கு இப்பொழுது 81 வயது. எகிப்தை சேர்ந்த 36 வயது மஹமத் என்ற வாலிபரும் அவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். பேஸ்புக்கில் கடலை போட்டு, பாட்டியை, பார்ட்டி ஆக்கி விட்டார் மஹமத்.
கடந்த 2019 நவம்பர் மாதம், தனது காதலனை பார்க்க பிரிட்டனிலிருந்து எகிப்து பறந்து சென்றிருக்கிறார் ஐரிஸ். அவரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த மஹமத்திற்கு, முதன்முறை நேரில் சந்தித்த போதே, பட்டாம்பூச்சி பறந்ததாம், உச்சந்தலைக்குள் மணி ஒலித்ததாம். இப்படியாக, காதலிற்குண்டான சிம்ரம்ஸை காண்பிக்க, ஐரிஸை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாராம்.
அதனை தொடர்ந்து இந்த ஜோடி, தம்பதிகளாக வாழத் துவங்கிவிட்டனர்.
இதுகுறித்து மஹமத் கூறுகையில், ‘இப்படி ஒரு அழகான தேவதையை காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன்’ என்றார்.
காதல் என்றால் வில்லன் இல்லாமலேயா..! ஆம்.. இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்திருக்கிறார் ஐரிஸின் மகன். 54 வயது நிரம்பிய ஐரிஸ் மகன் ஸ்டீபன், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை அசால்ட்டாக எதிர்கொண்ட ஐரிஸ், அடைந்தால் மகாதேவன்… சீ.. மஹமத், இல்லையென்றால் மரணதேவன் என தனது காதலில் உறுதியாக நின்றிருக்கிறார். இதனால் மகன் அவரிடமிருந்து பிரிந்து போக, குடும்பமே இரண்டாக உடைந்திருக்கிறது.
பாட்டி ஒருமுறை தனது சொந்த நாட்டுக்கு போக அதற்குள் கொரோனா பரவிவிட்டது
இப்பொழுது, தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கு செல்ல மஹமத்துக்கும் விசா கிடைக்கவில்லை. மீண்டும் தனது காதலியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் மஹமத்.
பிரிந்திருந்தாலும் இருவரும் ஒரே நிலாவையே பார்க்கிறோம் என இருவரும் கவிதையெழுதாத குறையாக, தத்தமது நாட்டில் விரகதாபத்துடன் காத்திருக்கிறார்களாம்.
0 Comments
No Comments Here ..