19,Apr 2024 (Fri)
  
CH
கட்டுரைகள்

ஆண்கள் ஏன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்?

பாலியல் பலாத்காரம் செய்பவர்களைப் பேட்டி எடுப்பது தாரா கௌஷலின் ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017ல் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியதில் இருந்து, அவர் மன அழுத்தம் மற்றும் வெறுமை உணர்வுக்கு ஆட்பட்டு வந்துள்ளார்.

சில நாட்களில் வெறும் கண்ணீரோடு நின்று போயிருக்கிறது.

மிக சமீபத்தில், ஒரு நாள் மாலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே நொய்டாவில் தன் படுக்கை அறையில் அவர் தனியாக இருந்தபோது, கதவு பூட்டிக் கொண்டது.

“எனது துணைவர் சஹில் வெளியில் இருந்தார். அதைத் திறப்பதற்கு அவர் முயற்சி செய்தார்” என்று தாரா தெரிவித்தார்.

“நான் நன்றாக இருக்கிறேனா என்பதைத் தெரிந்து கொள்ள கதவை பலமாகத் தட்டிப் பார்த்துள்ளார். நான் உள்ளே சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன்.”

“எனக்கு சிகிச்சை தேவைப்படுவதை உணர்ந்தேன்”

தன் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பாலியல் வன்முறையின் துன்பத்துக்கு தாரா ஆளாகி இருந்தார். தன்னுடைய 16வது வயதில் அதுபற்றி அவர் பேசத் தொடங்கி இருக்கிறார்.

“நான்கு வயதாக இருந்தபோதே நான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறேன்” என்று தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். “எங்கள் தோட்டக்காரர் அதைச் செய்தார்” என்றும் கூறியுள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவருக்கு, அது ஒரு தொடக்கமாக இருந்தது.

அப்போதிருந்து தாம் அனுபவித்த பாலியல் அத்துமீறல் பற்றி தாரா வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். பொது விவாதங்களில் பேசுவது, நண்பர்களிடம் கூறுவது என தொடங்கி, கடைசியில் ஒரு புத்தகமும் எழுதினார்.

“அந்த சம்பவத்தின் சில நினைவுகள் என்னிடம் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.

“அவருடைய பெயர் எனக்குத் தெரியும். எப்படி இருப்பார் என்று தெரியும். சுருண்ட முடிகளைக் கொண்டவர் என்பதும் நினைவிருக்கிறது. எனது நீல நிற ஆடையில் ரத்தம் பட்டது நினைவிருக்கிறது” என்றார் அவர்.

வயது அதிகரிக்க அதிகரிக்க, தினமும் நடைபெறும் மற்ற பாலியல் தாக்குதல் நிகழ்வுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஏன் அந்தச் சம்பவங்கள் நடக்கின்றன என்பதைக் கண்டறிய விரும்பினார்.

“நான் எழுதிய `ஆண்கள் ஏன் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்?’ என்ற தலைப்பிலான புத்தகம், உண்மையில் நீண்ட மற்றும் தொழில்முறை ஆய்வுகளின் அடிப்படையில் உருவானதாக உள்ளது” என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

“ஆனால் அது தொடர் துன்பங்களின் தொகுப்பாக வெளியானது” என்றார் அவர்.

`கண்டறியப்படாத’ வல்லுறவு செய்தோரைக் கண்டறிதல்

2012 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன. டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு அப்போது ஆளான சம்பவம் பெரும் போராட்டங்களுக்குக் காரணமாக இருந்தது.

அந்த பாலியல் தாக்குதலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், சில தினங்கள் கழித்து அவர் மரணம் அடைந்தார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் 2020 மார்ச் மாதம் தூக்கில் போடப்பட்டனர்.

பாலியல் குற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையிலும், சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் 33,977 பாலியல் வல்லுறவு வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்திருப்பதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவிக்கிறது. அதாவது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும், ஒரு பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. ஆனால், பல சம்பவங்கள் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால், உண்மையான சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருபோதும் புகாருக்கு ஆளாகாத அல்லது தண்டிக்கப்படாத வல்லுறவு குற்றவாளிகள் பற்றி கூடுதல் விஷயங்களைக் கண்டறிய தாரா விரும்பினார்.

நாடு முழுக்க பாலியல் பவல்லுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கி, அதிகாரபூர்வ விசாரணைக்கு ஆட்படாத ஒன்பது ஆண்களை அவர் சந்தித்தார்.

“அவர்களின் வீடுகளில் சந்திப்பு நடந்தது; அவர்களைப் பேட்டி எடுப்பது, அவர்களின் செயல்களைக் கவனிப்பது, குடும்பங்கள் மற்றும் நண்பர்களைக் கவனிப்பது என முயற்சி செய்தேன்” என்று தன் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். “வேறு பெயர், இமெயில் முகவரி மற்றும் முகநூல் கணக்குகளை இதற்காகப் பயன்படுத்தினேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பச்சை குத்தியிருந்ததை மறைத்து, பாரம்பரிய குர்தா மற்றும் ஜீன்ஸ் உடை அணிந்து கொண்டு சென்றார்.

மொழி பெயர்ப்பாளர் என்ற பெயரில், பாதுகாவலர் ஒருவரையும் தாரா அழைத்துச் சென்றார். சாமானிய ஆண்களின் வாழ்க்கை பற்றி திரைப்படத்துக்காக ஆராய்ச்சி செய்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர் என்று தன்னை காட்டிக் கொண்டார்.

“நான் 250 கேள்விகள் கேட்டேன். எல்லா ஆண்களிடமும் ஒரே மாதிரியான விஷயங்களை கவனித்தேன். ஆனால் அவர்கள் பாலியல் குற்றங்கள் செய்தவர்களாகக் கூறப்படுவதால், அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒருபோதும் கூறவில்லை” என்று அவர் எழுதியுள்ளார்.

“பாலுறவுக்கான ஒப்புதல் என்பதில் சரியான புரிதல் இல்லை” என்கிறார் அவர்.

விரும்பத்தகாத எந்த நிகழ்வையும் சந்திக்க தாரா தயாராக இருந்தார்: எப்போதும் பாக்கெட்டில் பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) வைத்திருந்தார். “திடீரென பிரச்சினை எழுந்தால் தப்புவதற்காக உள்ளூரில் அவசர கால தொடர்புக்கான எண்களை கொண்டு சென்றேன். நான் இருக்கும் இடம் பற்றிய தகவலை மற்றவர்கள் அறிந்து கொள்ள வாட்சாப் இணைப்பின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, பேட்டி கொடுத்த 3 ஆண்கள், அவரைத் தொடத் தொடங்குவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தியாவின் வட பகுதியில் கோடைக் காலத்தில், ஆண் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் அவரை சந்தித்ததை தாரா நினைவுகூர்ந்தார்.

“என் எதிரே அமர்ந்திருந்த சிறுவயதுடைய அந்த ஆள், நான் சந்தித்த பாலியல் குற்றவாளிகளிலேயே மிகவும் அதிகமான பாலியல் குற்றங்களைச் செய்தவராக இருந்தார் (அவருடைய ஒப்புதல் தகவல்களில் இது தெரிய வருகிறது). அந்த சிறிய கிராமத்தில் பல பெண்கள் அவருடைய ஆசைக்குப் பலியாகி இருக்கிறார்கள்” என்று தாரா எழுதியுள்ளார்.

“ஆனாலும் கைது செய்து தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அல்லது ஊரைவிட்டு விலக்கி வைக்கப்படுவதற்குப் பதிலாக, அந்த சமுதாயத்தின் முக்கிய நபராக அவர் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் பார்த்து அவர் உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளானார். தன்னை தடவிக் கொள்வதை ஓர் உறுத்தலாக அவர் நினைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அனுபவங்கள் தாராவின் மன ஆரோக்கியத்தை உண்மையில் பாதித்தன.

“இந்தப் பேட்டிகளில் இருந்து வந்தபிறகு, துன்பங்கள் சேர்ந்துவிட்டதை உணர்ந்தேன், அதற்கு சிகிச்சை தேவை என்பதை உணர்ந்தேன்” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

“எனக்கு நிறைய மன அழுத்தம் ஏற்பட்டது. இரவில் தூக்கத்தில் என் துணைவரை நான் கடித்த சம்பவங்கள், என்னை பலவந்தப்படுத்தாதே என்று கூறிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன” என்றும் தாரா தெரிவித்துள்ளார்.

கடைசியாக, தெளிவான விஷயத்துடன் தாரா விலகிக் கொண்டார்: “உறவுக்கு சம்மதித்துவிட்டார் என்பது பற்றி இந்த ஆண்களுக்குத் தவறான புரிதல் உள்ளது அல்லது பாலியல் பலாத்காரம் என்பது குறித்து ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என அவர் அறிந்து கொண்டார்.

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை `மற்றவர்களாக’ பார்த்தல்

தாரா தன் ஆராய்ச்சியைத் தொடங்கியபோது, பாலின வன்முறை குறித்து சமூக ஊடகங்கள் மூலமாக பெண்களுடன் அவர் பேசியுள்ளார்.

“இந்தப் பெண்களுடன் நான் உரையாடியதன் மூலம், 2 ஆண்கள் பேட்டியில் பங்கேற்றார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

“மற்ற ஏழு பேரை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே உள்ளூர் காவல் துறையினர், அந்தப் பகுதி செய்தியாளர்கள், தன்னார்வலர் அமைப்பினர் மற்றும் துப்பறியும் நிறுவனங்களின் உதவியை நாடினேன்” என்றும் தாரா குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேட்டி எடுத்த ஆண்களில் பலர், பாலியல் வல்லுறவு அல்லது வல்லுறவுகள் செய்ததை உறுதி செய்தனர்.

ஆனால் தண்டிக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுடன் பேச வேண்டாம் என்ற தெளிவான முடிவையும் அவர் வைத்திருந்தார்.

“பாலியல் வல்லுறவு செய்யும் ஆண்களை வைத்திருக்கவேண்டிய இடம் சிறை கிடையாது என்பது என் கருத்து” என அவர் கூறுகிறார்.

“மக்கள் தீவுகளைப் போல தனித்து வாழ்வதில்லை. சூழ்நிலைகளைப் பற்றி ஆய்வு செய்யாமல், ஆண்களைப் பற்றி அறிய முற்படுவது, அதிக விஷயங்களை வெளிப்படுத்தாது” என்கிறார் அவர்.

இதற்கு மாறாக, ஷெபீல்டு ஹல்லம் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மதுமிதா பாண்டே நடத்திய ஆய்வில், தண்டிக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த முடிவு செய்தார்.

2012ல் நடந்த கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்துக்குப் பிறகு அவருடைய ஆராய்ச்சி தொடங்கியது. “பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்கள் முரடர்களாக கூறப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பரவலான வெறுப்பு இருந்தது” என்று அவர் நினைவுகூர்கிறார்.

“அவர்களை நம்மிடம் இருந்தும், நம் கலாச்சாரத்தில் இருந்தும் தனிப்பட்டவர்களாக `மற்றவர்கள்’ என்ற வகையில் அவர்களைப் பார்ப்பதன் காரணமாக அவர்களின் செயல்களில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து பரிதாபம் கொண்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவர்கள் பெண்கள் குறித்த பழமைவாத மற்றும் அடக்குமுறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற அம்சத்தில் கவனம் செலுத்த, ஆராய்ச்சியாளர் என்ற வகையில் அவர் விரும்பினார்.

“ஆனால் நாம் நினைப்பதைப் போல, பெண்களைப் பற்றி இவர்களுடைய எண்ணம் மாறுபட்டிருக்கிறதா” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தெற்காசியாவில் மிகப் பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகக் கருதப்படும் டெல்லி திகார் சிறையில், பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் டாக்டர் மதுமிதா பேட்டி எடுத்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தனித்தனி கதைகளைக் கூறினர்; சம்பவம் நடந்ததும் தாம் ஓடிவிட்டதாக கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவர் கூறினார். ஐந்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய தமக்கு “தூண்டுதல் ஏற்பட்டது” என்று கோவில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டதாகக் கூறிய இளைஞர் ஒருவர், பெண்ணின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தெரிய வந்ததால் பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து வயது சிறுமியைப் பற்றிய தகவல் டாக்டர் மதுமிதாவுக்கு நெஞ்சை உருக்கியதால் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க முடிவு செய்தார்.

“தன் மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக அறிந்ததும், சிறுமியின் தந்தை மனம் உடைந்து, குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்” என்று டாக்டர் மதுமிதா கூறினார்.

“சிறுமியின் தாய்தான் காவல் துறையை நாடி, குற்றத்தைப் பதிவு செய்யும் வேலைகளை செய்தார். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் அவற்றைச் செய்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைப் பற்றி இந்த ஆண்கள் என்ன நினைக்கிறார்கள், பாலியல் வன்முறைகளுக்கு இந்த எண்ணங்கள் எப்படி காரணமாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள டாக்டர் மதுமிதா விரும்பினார்.

“குற்றத்தின் தன்மையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் சமூகத்தில் ஆண்களுக்கு உள்ள உரிமை என்ற கருத்தில் பொதுவான சிந்தனைகள் அவர்களிடம் இருப்பதாகத் தெரிய வந்தது” என்கிறார் அவர்.

குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுவதையும், மனம் ஒப்புக்கொண்டு உறவு கொள்வது என்பது பற்றி சரியான புரிதல் இல்லை என அவர்கள் கூறுவதையும் மதுமிதா கண்டறிந்தார்.

“அருகிலேயே நிழல்போல நடமாடக் கூடிய புதியவர்கள் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்” என்ற பொதுவான கருத்து தவறானது என்று இவரது ஆராய்ச்சி கூறுகிறது. தாராவின் ஆராய்ச்சியிலும் இதே கருத்துதான் தெரிய வந்தது.

“ஆனால் இந்த நேர்வில், பலருக்கு, குற்றவாளிகளைத் தெரிந்துள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் பாலியல் வல்லுறவு குற்றவாளியாக இருக்கலாம் – அவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதை எளிதாக உணர முடிகிறது” என்று டாக்டர் மதுமிதா கூறுகிறார்.

பல பாலியல் வல்லுறவு குற்றங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, குற்றவாளிகள் தெரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது முந்தைய தகவல் தொகுப்புகள் மூலம் தெரிய வருகிறது. 2015ல் நடந்த பாலியல் வல்லுறவு குற்றங்களில், 95 சதவீத சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களே குற்றத்தை செய்திருக்கிறார்கள் என்று இந்தியாவின் தேசிய குற்ற ஆவண அமைப்பின் தகவல் தெரிவிக்கிறது.

“குற்றம் செய்தவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவராக இருப்பதால், பல சம்பவங்கள் புகாராகப் பதிவு செய்யப்படுவதில்லை” என்று 39A ப்ராஜெக்ட் என்ற சமூக நீதி அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் அனுப் சுரேந்திரநாத் தெரிவித்தார்.

புகார் பதிவு செய்யப்படும் சம்பவங்களிலும், மிகவும் கொடூரமான அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன.

பாலியல் வல்லுறவு குற்றங்கள் இந்தியாவில் மட்டும் தான் அதிகம் நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் ஆணாதிக்க சமூகம் மற்றும் ஆண் – பெண் விகிதாச்சார மாறுபாடு ஆகியவைதான் நிலைமை மோசமாகக் காரணம் என்று பலரும் நம்புகின்றனர்.

“பலத்தைக் காட்டும் வகையிலும், பலமற்றவர்களை அடக்கி வைப்பதற்கும் ஒரு கருவியாக பாலியல் வல்லுறவில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்” என்று பிபிசி இந்திய செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.

“பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவு செய்யப்படும் அளவில் இந்தியாவின் நிலைமை பரவாயில்லை. ஆனால், குழப்பமான குற்றவியல் நடைமுறை சட்டங்கள் காரணமாக, அரசியல் அழுத்தங்கள் காரணமாக, குற்றவாளிகள் பலரும் தப்பிவிடுகிறார்கள். வெகு சிலர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள் என்பது கெட்ட செய்தியாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

2012 கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவத்துக்குப் பிறகு அரசு மிகக் கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், மரண தண்டனை விதிப்பது நீண்ட கால தீர்வு தருவதாக இருக்காது என்று தாராவும், டாக்டர் மதுமிதாவும் ஒரே மாதிரியாகக் கூறுகின்றனர்.

“சீர்திருத்தம் மற்றும் புதுவாழ்வுப் பயிற்சி அளிப்பது ஆகியவை தேவை என்று நான் நம்புகிறேன்” என்று டாக்டர் மதுமிதா கூறுகிறார்.

“நம் நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் தலைகீழாக உள்ள ஆதிக்க திறன் உறவுகளை சரி செய்யும் வகையில், சமூகக் கட்டமைப்பு மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் அவர்.

தாரா இதை ஒப்புக்கொள்கிறார். “இந்தக் குற்றத்தில் அதிகம் பங்கு வகிக்கும் நபர் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் அதிக பங்கு ஆண்களுக்குதான் உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

“அவர்களை எப்படி நாம் நிறுத்த முடியும்? நல்லவராக இருக்கும்படி குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்பிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

தாரா பேட்டி எடுத்த ஆண்களில் யாருமே, தங்கள் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி பெறவில்லை. “மாறாக, நண்பர்களுடன் மறைவிடங்களில் பேசிக் கொள்வது, பாலியல் வல்லுறவு என்றால் என்ன என அறியாதது, ஆபாச விஷயங்கள் அல்லது பாலியல் தொழிலாளர்கள் பற்றி அறியாதது என இருந்துள்ளனர்.”

குழந்தைப் பருவத்திலேயே, இதுபோன்ற பாலியல் வன்முறைகளை அவர்களில் பலர் நேரில் பார்த்துள்ளனர்.

“தாயை தந்தை அடிப்பது, அன்பில்லாத சூழலை அனுபவித்தல், தந்தை மற்றும் மூத்த ஆண்களால் திரும்பத் திரும்ப வன்முறைகளுக்கு ஆளாவது ஆகியவை எல்லா தரப்பட்ட குடும்பங்களிலும் நடந்துள்ளது” என்று அவர் எழுதியுள்ளார்.

பலத்தைக் காட்டும் உரிமை தங்களுக்கு உள்ளது என்ற மனோபாவத்துடன் ஆண்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்று அவருடைய ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

“பாலியல் வல்லுறவு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்பதால், இதற்கு ஒரே பதிலைக் கூறிவிட முடியாது” என்று டாக்டர் மதுமிதா கூறியுள்ளார்.

“ஒவ்வொரு விவரிப்பும் தனிப்பட்டதாக இருக்கின்றன. சிலர் கூட்டு பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலருக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலர் முற்றிலும் அறிமுகம் இல்லாதவர்களை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள். கோபத்தில் வல்லுறவு செய்பவர், துன்புறுத்தும் மன நிலையில் வல்லுறவு செய்பவர், தொடர்ந்து பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுபவர் என இதில் வெவ்வேறு குற்றவாளிகள் இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவர்கள் கணவராக, உடன் வேலை செய்பவராக, நெருங்கிய நண்பராக, காதலராக, வகுப்புத் தோழராக அல்லது பேராசிரியராக என இதில் யாராவது ஒருவராக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“நாட்டில் உள்ள மக்கள் பலரையும்போல, சிறைக்குள் எதை அறியப் போகிறோம் என்பதில் எனக்கு சில அனுமானங்கள் இருந்தன. பாலிவுட் திரைப்படங்களில் பார்த்ததன் அடிப்படையில் அந்தக் கருத்து உருவாகியிருந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் ஆணாக, உடலில் சிராய்ப்புகள், தழும்புகள் உள்ளவர்களாக, கோடுபோட்ட சட்டை போட்டவர்களாக இருப்பார்கள். என்னிடம் இவர்கள் தகாத முறையில் நடந்து கொள்ளக் கூடும் அல்லது மோசமான கமெண்ட்கள் கூறக்கூடும், அந்த பேட்டி அனுபவமே அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற பயம் எனக்கு இருந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் ஒரே மாதிரியானவர்களாக இல்லை என்பதை சீக்கிரத்திலேயே அவர் உணர்ந்து கொண்டார். “அவர்களுடன் நான் அதிக நேரம் உரையாடி, அவர்களின் வாழ்க்கை பற்றி கேட்டுக் கொண்டிருந்த வரையில், அவர்கள் வழக்கத்திற்கு மாறுபட்டவர்களாகத் தோன்றினர். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று டாக்டர் மதுமிதா கூறியுள்ளார்.

பாலின வன்முறை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, சமுதாய அளவில் கூட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் அவர். வெவ்வேறு வகையிலான பாலியல் வன்முறைகள் ஒன்று சேரும்போது, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன என்று பிரிட்டன் பேராசிரியர் லிஸ் கெல்லியின் கோட்பாட்டை அவர் குறிப்பிடுகிறார்.

“நம்மைச் சுற்றியுள்ள ஆண்கள் ஆபத்தானவர்கள் என்ற எண்ணம் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால் அது புதியது கிடையாது” என்கிறார் அவர்.

“நாம் ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்கிறோம். யாராவது ஒருவர் உங்களை பாலியல் வல்லுறவு செய்வார்கள் என சொல்ல முடியாது. ஆனால் உங்கள் மீதான ஆதிக்கம் பல வகைகளில் தலைகாட்டும். சமூகம் அதை இயல்பானதாக மாற்றியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

சமூகத்தில் தினமும் பெண்கள் மீது வெறுப்பு காட்டப்படுவதை அவர் குறிப்பிடுகிறார். வேலை செய்யும் இடத்தில் பாலியல் சீண்டல்கள், தெருவில் இடையூறு என பல விஷயங்கள் எல்லை மீறாத வரையில், பெரிதாக கண்டுகொள்ளப் படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“பாதிக்கப்பட்ட பெண்களின் ஆடைகள் குறித்து, பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் கமெண்ட்கள் கூறுவது, அதை ஒரு காரணமாகக் கூறுவது எங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் ஏன் அவ்வளவு பயப்பட வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“தினமும் நடைபெறும் நிகழ்வுகளை சாதாரணமானது என நாம் கருதும்போது, அதுவே அதிகரித்து, மிக மோசமாக உருவெடுப்பது ஏன் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது” என்றும் அவர் கேட்கிறார்.

“பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுடன் உரையாடலை நான் நிறைவு செய்யும்போது, அவர்கள் பயன்படுத்தும் சொற்கள் மற்றும் தங்கள் செயலுக்கான காரணங்கள் ஆகியவை தாங்கள் வாழ்ந்த சூழலை பிரதிபலிப்பவையாக இருந்ததைக் காண முடிந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தவறான சிந்தனைகளை மாற்ற உதவக் கூடிய மறுவாழ்வுப் பயிற்சித் திட்டத்தில் டாக்டர் மதுமிதா இப்போது பணியாற்றி வருகிறார்.

“பாலியல் குற்றங்களுக்கான காரணம் எவை என்பது குறித்த தவறான நம்பிக்கையை உடைக்கவும், பெண்கள் குறித்த பழமையான மனப்போக்குகளை மாற்றவும் உதவும் வகையில் குழு அல்லது தனிப்பட்ட அளவில் இந்தியாவில் பாலியல் குற்றவாளி மறுவாழ்வுப் பயிற்சித் திட்டம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

“அந்த சிந்தனையுடன்தான் நான் தினமும் எழுகிறேன், அந்த சிந்தனையுடன் தான் தூங்கச் செல்கிறேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது” என்று டாக்டர் மதுமிதா கூறுகிறார்.




ஆண்கள் ஏன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு