20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

டெல்லியில் நடக்கும் விவசாயப்போராட்டத்திற்கு வெளிநாட்டினர் ஆதரவு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய விவசாயிகளுக்கு கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து , தில்லி எல்லைகளில் சிங்கு, திக்ரி, ஹாஜிபூா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் குவிந்திருக்கும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்தி உள்ளது.

சிங்குவில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளுடன் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி- ஹரியாணா எல்லையில் தற்காலிக சிமென்ட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜிபூரில் பல அடுக்குத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோலவே, அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி ரிஹானா, விவசாயிகள் போராடி வரும் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து, இது குறித்து ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி, தனது ஆதரவை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, உலக நாடுகளின் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நிலையில், தற்போது இவர்களது ஆதரவு, விவசாயிகளின் போராட்டத்துக்கு உலகக் கவனத்தைப் பெற்றுத் தரும் என்று கருதப்படுகிறது.




டெல்லியில் நடக்கும் விவசாயப்போராட்டத்திற்கு வெளிநாட்டினர் ஆதரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு