இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை கடைப்பிடித்தனர். இன்று அவற்றையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதே இல்லை. வருங்காலங்களில் “அவ்வாறான பழக்கங்கள் இருந்ததா…?” என வினவும் வகையில் காலம் மாறி விடும்.
இதோ…! உங்களுக்காக, நம் முன்னோர்கள் பின்பற்றிய விதி முறைகளும் அதற்கான அறிவியல் காரணங்களும்,
தரையில் அமர்ந்து சாப்பிடுதல்
தரையில் அமர்ந்து சம்மணம் (சுகாசனா, பாதி பத்மாசனா) போட்டு சாப்பிடும் போது அழகும் ஆயுளும் கூடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்…?
அமைதியாக தரையில் சம்மணம் போட்டு அமரும் போது செரிமானத்திற்கு தயாராகுமாறு மூளைக்கு செய்தி செல்கிறது. அத்தோடு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் மூளை தெளிவாக முடிவெடுக்கிறது. வாழை இலை தரையில் இருப்பதால் நாம் குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றுப் பகுதி தசை சுருங்கி விரிந்து அமிலம் சுரப்பதால் எளிதில் உணவு சமிபாடடைகிறது. இவ்வாறு அமர்ந்து எழுவதை வழக்கமாக கொள்வதால் முழங்கால் மற்றும் இடுப்பெலும்புகள் வலுவடைகின்றன, ரத்த ஓட்டம் சீராக பேணப்படுகிறது.
வாழை இலையில் சாப்பிடுதல்
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இளநரை வராது தடுக்க முடியும், தோள் பளபளப்பாகும். வாழை இலை கிருமிநாசினியாகவும் செயற்பட்டு உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கிறது. வாழை இலையில் காணப்படும் பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செரிமானம் அடைய வைப்பதோடு வயிற்றுப் புண்ணையும் ஆற்றுகிறது. வாழை இலையில் சாப்பிடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் பெற முடியும்.
நொறுக்கத் தின்றால் நூறு வயது
நொறுக்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழியினை அடிக்கடி நம் வீட்டில் பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். உணவினை வேக வேகமாக விழுங்கும் போது “மெல்ல சாப்பிடு…!” என அறிவுறுத்துவர். இதற்கான காரணம் மெல்ல கடித்து அரைத்து உமிழ் நீருடன் உண்பதால் இது உடலுக்கு அதிகபலத்தையும் உணவிலுள்ள சத்துக்கள் வீணாகாமலும் பாதுகாக்கும். உமிழ் நீரிலுள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையை போக்குகிறது.
பேசாது சாப்பிடுதல்
சாப்பிடும் போது பேசுவதால் சுவாசக் குழாய்க்குள் உணவு செல்ல வாய்ப்புண்டு. சாப்பிடும் போது உதடுகளை மூடியபடி சாப்பிட வேண்டும். அத்தோடு கையடக்க தொலைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அதிகளவான உணவை உள்ளெடுக்க வாய்ப்புண்டு. இது உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும்.
உணவே மருந்து என வாழ்ந்த காலம் சென்று மருந்தே உணவு என வாழும் துரதிஷ்டமான காலத்தில் உள்ளோம். இனியாவது உணவினை உண்ணும் போது நம் முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
0 Comments
No Comments Here ..