பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகரத்திற்குள் வலம் வந்த பேரணி தற்போது, மன்னார் வீதியால் முன்னகர்ந்து வருகிறது.
இன்றைய பேரணியில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக, முஸ்லிம் மக்களும் கணிசமானளவானர்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா பள்ளிவாசலின் அருகிலும் பேரணி தரித்து நின்று ஜனசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களில் கோசமெழுப்பப்பட்டது. அந்த மசூதியின் பிரதான மௌலவியும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியின் 4ஆம் நாள் இன்றாகும். இன்று வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கவுள்ளது.கடந்த 3ஆம் திகதி அம்பாறையின் பொத்துவில் பகுதியில் பேரணி தொடங்கியது. எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், க.சுகாஸ் போன்றவர்கள் இதன்போது முன்னிலை வகித்தனர்.இதன்போது, பல தடைகள் காவல்துறையால் போடப்பட்ட போதும், போராட்டக்காரர்கள் அதை உடைத்தெறிந்தனர். இந்த அதிரடி நடவடிக்கைகளில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் போன்றவர்கள் துருத்திக் கொண்டு தெரிந்தனர்.முதல்நாள் பேரணி மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.
இரண்டாம் நாள் போராட்டம் 4ஆம் திகதி தாழங்குடாவில் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரையடைந்து, அங்கிருந்து திருகோணமலை சிவன் கோவிலில் முடிவடைந்தது. இரண்டாம் நாளிலும் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் முன்னணி வகிப்பதாக பிம்பம் தோன்றியது. முஸ்லிம் பகுதிகளில் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை முன்னிலைப்படுத்தி வரவேற்பளிக்கப்பட்டது. இது பேரணியில் கலந்து கொண்ட ஏனைய தரப்பினரை அதிருப்தியடைய வைத்தது. வடக்கில் பேரணியில் இணைய தயாராக இருந்த ஏனைய அரசியல் கட்சிகள் சில தமது முடிவை மாற்றும் நிலைமையேற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஏனையவர்களும், ஏற்பாட்டாளர்களிடம் அதிருப்தி தெரிவித்தனர்.இதனால், நேற்று 3ஆம் பேரணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
நேற்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து 3ஆம் நாள் பேரணி ஆரம்பித்தது. இதன்போது, கருத்து தெரிவித்த மத தலைவரான வேலன் சுவாமிகள், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவிப்பதாக தெரிவித்தார்.சம்பவங்களில் ஏதாவது அதிருப்தியிருந்தால் அதை தம்மிடம் நேரில் பேச வேண்டுமே தவிர, பகிரங்கமாக பேசுவது ஒற்றுமையான பேரணிக்கு பாதகமானது என எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இதனால் பேரணியின் ஆரம்பத்தில் சிறு சலசலப்பு எழுந்தது. இந்த சலசலப்பின் போது, பாதிரியார் ஒருவரை மிரட்டுவதை போல, நடந்து கொண்டார்.
இந்த சர்ச்சையையடுத்து, திருகோணமலையில் பேரணி நகர தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சுமந்திரன் இடைநடுவில் விலகி சென்றார். இரா.சாணக்கியன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் வரை வந்தார். பின்னர் பேரணியை விட்டு திரும்பி சென்றார்.இருவரும் இன்று பேரணியில் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
பேரணிக்கு திருகோணமலை சிங்கள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது. புல்மோட்டைக்கு அண்மையாக- கல்லறை பாலத்தில் வீதியில் ஆணிகள் தூவப்பட்டு தடையேற்படுத்தப்பட்டது. இவற்றை கடந்து முல்லைத்தீவிற்குள் பேரணி நுழைந்தது.நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பேரணி சென்றது. பின்னர் முல்லைத்தீவு நகரையடைந்து, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் தூபிக்கு சென்றது. பின்னர் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஊடாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
0 Comments
No Comments Here ..