யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட் ஆடம்பர செலவு செய்து வாங்கிய மடிக்கணினியின் கடவுச்சொல்லை மறந்து விட்டேன் என கைவிரித்துள்ளார். இதனால் பெறுமதியான அந்த மடிக்கணினியை என்ன செய்வதென தெரியாமல் மாநகர நிர்வாகம் திண்டாடி வருகிறது.யாழ் மாநகரசபை அமர்வுகள் நேற்று (16) இடம்பெற்ற போது இந்த விவகாரம் எதிரொலித்தது.
யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட் பதவியிலிருந்த போது, அத்தனை சொகுசுகளையும் அனுபவிக்க வேண்டுமென ஆலாய்ப்பறந்து திரிந்தார். தனது தனிப்ப்பட்ட பாவனைக்கு 6.5 இலட்சம் ரூபா செலவிட்டு அப்பிள் மடிக்கணினி ஒன்றை கொள்வனவு செய்தார்.புதிய முதல்வராக வி.மணிவண்ணன் தெரிவானதும், அந்த கணினியை விற்பனை செய்ய யோசனை தெரிவித்தார். எனினும், மாநகரசபை நிர்வாகம் விதிமுறைகளை காரணம் காட்டி அதை நடைமுறைப்படுத்தவில்லை.நேற்றைய மாநகரசபை அமர்வின் போது, முதல்வர் வி.மணிவண்ணன் உரையாற்றுகையில், மடிக்கணினியை காண்பித்து, இதை என்ன செய்வதென கேள்வியெழுப்பினார் அவர் உரையாற்றுகையில்,ஆர்னோல்ட்டின் தனிப்பட்ட பாவனையில் இருந்த அந்த கணினியின் அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை தருமாறு கேட்டோம். அவர் மறந்து விட்டதாக சொன்னார். அந்த பயனர் பெயரையாவது தருமாறு கேட்டோம். அதையும் மறந்து விட்டதாக சொன்னார்.
கொழும்பிலுள்ள இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, பயனர் பெயர், கடவுச்சொல் இல்லாமல் கணினியை மீட்டெடுக்க முடியாது என்றார்கள். கொழும்பிற்கு கொண்டு வந்தால் முயற்சித்து பார்க்கலாமென கூறியுள்ளார்கள்.இவ்வளவு பெறுமதியான மடிக்கணினியை எதற்கு கொள்வனவு செய்தீர்கள் என முன்னாள் முதல்வரின் உதவியாளரிடம் வினவியிருந்தேன். ஒருமுறை ஆர்னோல்ட் கொழும்பு மாநகரசபைக்கு சென்றதாகவும், அங்கு முதல்வர் ரோசி சேனநாயக்கவின் மேசையில் அப்பிள் மடிக்கணினி இருந்ததாகவும், அதை பார்த்து ஆசைப்பட்டே ஆர்னொல்ட் பெரும்தொகை மாநகரசபை பணத்தை செலவிட்டு மடிக்கணினி வாங்கியதாக அவர் சொன்னார் என தெரிவித்தார்.
இதையடுத்து, மடிக்கணினியின் கடவுச்சொல்லை ஆர்னோல்ட் வழங்க வேண்டுமென சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..