21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கடற்படைக்கு மாற்று இடத்தில் காணி?

காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

பிரதேச மக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்த அளவீட்டு பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

காரைநகர் இந்து கல்லூரிக்கு சொந்தமான மற்றும் தனியார் காணிகள் 8 பரப்பை, கடற்படையின் எலார கடற்படை தளத்திற்காக சுவீகரிக்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அந்த காணிகள் அளவீட்டு பணி மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு குவிந்தனர். தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், செ.கஜேந்திரன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட பலர் அங்கு கூடினர்.

எதிர்ப்பையடுத்து நிலஅளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.

இதையடுத்து காரைநகர் பிரதேச செயலாளரை மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசினர்.

“3 தனியாருக்கு சொந்தமான காணிகளை 2016ஆம் ஆண்டு கடற்படையினர் தமது பாவனைக்கு வழங்கும்படி கோரினர். 2017ஆம் ஆண்டு அதில் இரண்டு காணி உரிமையாளர்கள் தமது காணிகளை காரைநகர் இந்துக்கல்லூரிக்கு விற்பனை செய்தனர். 2016ஆம் ஆண்டிலேயே தாம் சுவீகரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்து விட்டதால், இந்த விற்பனை செல்லுபடியற்றது என கடற்படையினர் தெரிவித்து வருகிறார்கள்.

காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு இருந்தால் அந்த பகுதியில் வேறு இடத்தில் 8 பரப்பு காணியை தருமாறு கடற்படையினர் கேட்டுள்ளனர். ஒரு அரச உத்தியோகத்தராக செய்ய வேண்டிய கடமையை நான் செய்கிறேன்“ என காரைநகர் பிரதேச செயலாளர் விளக்கமளித்துள்ளார்.




கடற்படைக்கு மாற்று இடத்தில் காணி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு