06,May 2024 (Mon)
  
CH
சினிமா

த்ரிஷ்யம் 2 -விமர்சனம்...

தன்னிடமும் தன் மகளிடமும் அத்துமீற முயற்சிக்கும், போலீஸ் அதிகாரி ஆஷா சரத்தின் மகனை கொள்கிறார் மீனா. அந்த கொலையையும் சடலத்தையும் மறைத்து போலீஸிடம் கடைசி வரை உண்மையை சொல்லாமல் போராடி குடும்பத்தை காப்பாற்றுகிறார் மோகன்லால். புதிதாக கட்டப்பட்டு வந்த அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் தான், அந்த இளைஞனின் உடல் புதைக்கப்பட்டு விட்டது என்கிற அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மையுடன் முதல் பாகம் முடிந்தது.

போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் இடித்து தோண்டப் போகிறார்களா என்ன, இனி அந்த உண்மை மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விடும் என்று ஜார்ஜ் குட்டியான மோகன்லாலின் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டு வெளியே வந்த நம் மீது இந்த இரண்டாம் பாகத்தில் இடியை இறக்கி இருக்கிறார்கள்.

ஆறு வருடங்கள் கழித்து துவங்கும் இந்த இரண்டாம் பாகத்தில் மோகன்லாலின் பெண்கள் இருவரும் பெரியவர்களாகி கல்லூரி செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.. வீட்டையும் கூட பெரிதாக கட்டிவிட்டார்கள். ஆனால் மூத்த மகளின் போலீஸ் பயம் மட்டும் இன்னும் அவரைவிட்டு நீங்கவில்லை. டவுனில் தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்குவதுடன், சினிமா எடுக்கிறேன் என கூறிக் கொண்டு, டவுனுக்கு சென்று அடிக்கடி ராத்தங்கும் புது ஆளாக மாறியிருக்கிறார் மோகன்லால்.

புதிதாக பொறுப்பேற்கும் ஐஜி முரளிகோபி, இறந்துபோன தனது சக போலீஸ் அதிகாரி ஆஷா சரத்தின் மகனின் சடலத்தை கண்டுபிடித்து, மோகன்லாலை உள்ளே தள்ள களத்தில் இறங்குகிறார். மோகன்லாலின் கெட்ட நேரமோ என்னமோ, அந்த சடலத்தை அவர் ஸ்டேஷனில் புதைத்த உண்மை, ஆறு வருடங்களுக்கு பிறகு ஒருவர் மூலமாக வெளிவருகிறது. சடலமும் தோண்டி எடுக்கப்படுகிறது. மோகன்லால் குடும்பத்தை அப்படியே ஸ்டேஷனுக்கு அள்ளி வருகிறது போலீஸ்.. எந்தப்பக்கமும் தப்ப வழியில்லாத மோகன்லால் இந்த இக்கட்டில் இருந்து தப்பித்தாரா, இல்லை குடும்பத்தை காப்பாற்ற தன்னையே தியாகம் செய்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

முதலில் பாராட்ட வேண்டியது மீனாவின் நடிப்பைத்தான். தனது குடும்பத்திற்கு எந்நேரம் என்ன நிகழுமோ என்கிற அச்சத்திலேயே இருக்கும் குடும்பத்தலைவியின் இறுக்கமான உணர்வுகளை படம் நெடுக அழகாக பிரதிபலித்திருக்கிறார். அந்த உணர்வுகளே ஏதோ நடக்கப்போகிறது என்கிற திகிலை நமக்குள் ஏற்படுத்துகிறது.

சடலத்தை யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி மறைத்து விட்டோமே என, இந்த ஜார்ஜ்குட்டி, இப்படி அசால்ட்டாக சுற்றிக்கொண்டே இருக்கிறாரே என்று படம் நெடுகிலும் நம்மை அடிக்கடி நினைக்க தூண்டுகிறார் மோகன்லால். ஆனால் அதற்கெல்லாம் காரணம் தெரிய வரும்போது, நம்மால் ஆச்சர்யத்தை அடக்கவே முடியாமல் போகிறது. இந்தமுறையும் அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றி கொள்கிறார், ஆனால் அது எப்படி என்பதை கடைசி வரை நம்மால் யூகிக்கவே முடியவில்லை. என் குடுபத்தை காப்பாற்ற நான் எப்போதுமே ஒரு ஸ்டெப் முன்கூட்டியே யோசிப்பேன் என படம் ரிலீசுக்கு முன்பே ஜார்ஜ்குட்டி குறித்து மோகன்லால் சொன்னதன் அர்த்தம் இதில் நூறு சதவீதம் நிரூபணமாகியுள்ளது.

மோகன்லாலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடிகார கணவனின் அப்பாவி மனைவி (அஞ்சலி நாயர்), ஒரு புதிய ஐஜி (முரளிகோபி), உள்ளூர் ஸ்டேஷனில் ஒரு கண்டிப்பான எஸ்.ஐ (கணேஷ் குமார்), சினிமாவுக்கு கதை எழுதும் ஒரு கதாசிரியர் (சாய்குமார்) ஆறு வருடம் கழித்து சிறையில் இருந்து விடுதலையாகும் ஒரு கொலையாளி என ஒருசில கதாபாத்திரங்களை மட்டும் புதிதாக நுழைத்து இரண்டாம் பாகத்திற்குள் நம்மையும் அழகாக உள்ளே இழுத்து அமர வைத்து விடுகிறார்கள்.

முதல் பாகத்தின் வெற்றி தந்த களிப்பில் பல இயக்குனர்கள் இரண்டாம் பாகத்தில் சறுக்குவது உண்டு.. ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல, கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் ரீமேக்காகியுள்ள இந்தப்படத்திந முதல் பாகத்திற்கு, எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்து, பிசிறு தட்டாமல் திரைக்கதையை உருவாக்கி, இரண்டாம் பாகத்திலும் சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.




த்ரிஷ்யம் 2 -விமர்சனம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு