12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்-ரோஹித் அரைசதம்...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரவு உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 5 ரன்களுடனும், ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். நீண்ட நேரமாக ரன் கணக்கைத் தொடங்காமலிருந்த கில் 27-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரை அறிமுகப்படுத்தினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். அதற்குப் பலனளிக்கும் வகையில் ஆர்ச்சர் வேகத்தில் கில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சேத்தேஷ்வர் புஜாரா அடுத்த ஓவரிலேயே ஜேக் லீச் சுழலில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை பாட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா அரைசதத்தை எட்டினார். இதன்மூலம், இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்து பயணித்தது.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் லீச் சுழலில் கோலி (27 ரன்கள்) போல்டானார். அடுத்த 4 பந்துகளை அஜின்க்யா ரஹானே மற்றும் ரோஹித் சர்மா தடுத்து ஆட முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.





முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்-ரோஹித் அரைசதம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு