இறைவனை, ‘என்னுடையவன், உன்னுடையவன்’ என்று பிரித்துப் பார்க்கும் சூழல் இந்த கலிகாலத்தில் நிகழவேச் செய்கிறது. ஆனால் இது ஆதிகாலத்தில் சிவகணங்களுக்கு இடையிலும் கூட இருந்திருக்கிறது. அந்தக் கதையை பற்றி அறிந்துகொள்வோம்.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். அவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சரிசமமாக நினைத்து வழிநடத்துபவன். ஆனால் அப்படிட்ட இறைவனை, ‘என்னுடையவன், உன்னுடையவன்’ என்று பிரித்துப் பார்க்கும் சூழல் இந்த கலிகாலத்தில் நிகழவேச் செய்கிறது. ஆனால் இது ஆதிகாலத்தில் சிவகணங்களுக்கு இடையிலும் கூட இருந்திருக்கிறது. அந்தக் கதையை பற்றி அறிந்துகொள்வோம்.
சிவபெருமானின் கணங்களில் மாலியவான், புஷ்பதத்தன் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே, சிவ பக்தியில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சாபமிட்டுக் கொண்டனர். அதன்படி புஷ்பதத்தன், மாலியவானை சிலந்தியாகும்படியும், மாலியவான் புஷ்பதத்தனை யானையாக மாறும்படியும் சபித்துக்கொண்டனர்.
அதன்படி இருவரும் சோழநாட்டில் காவிரிக் கரையில் உள்ள திருவானைக்காவல் என்னும் புண்ணிய தலத்தில், சிலந்தியாகவும், யானையாகவும் பிறப்பெடுத்தனர். கரையின் ஓரமிருந்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது. யானையாக இருந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவியின் பலனால் சிவபக்தியில் சிறந்திருந்தான். யானை தினமும் தும்பிக்கையில் நீரை நிரப்பி மலரை கொணர்ந்து சிவலிங்கத்துக்கு நீர் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. சிலந்தியாக இருந்த மாலியவான் லிங்கம் மீது காய்ந்த இலைகள் விழாமல் இருக்க லிங்கத்தைச் சுற்றி வலைகளைப் பின்னியது. யானை பூஜை செய்ய வரும்போது லிங்கத்தின் மீது சிலந்தி பின்னியிருக்கும் வலையை களைந்து பூஜை செய்வதும், அதன் பிறகு வரும் சிலந்தி தன் வலையை காணா மல் வருந்தி மீண்டும் பின்னுவதும் வழக்கமாயிற்று.
ஒரு நாள் தன் வலையை, சிதைப்பது யார் என்று நினைத்த சிலந்தி, அதை அறிய அங்கே மறைவாக இருந்தது. வழக்கம்போல அங்கே வந்த யானை, சிலந்தியின் வலையைக் களைந்து, சிவ பூஜை செய்தது. இதனால் கோபம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கையில் நுழைந்து கடித்தது. இதனால் வலிதாங்காமல், தும்பிக்கையை பலமுறை தரையில் ஓங்கி அடித்தது யானை. முடிவில் யானையும் இறந்து போனது, யானையின் தும்பிக்கையில் நுழைந்த சிலந்தியும் இறந்துவிட்டது. யானை குற்றம் புரியாததால் சிவ கதி அடைந்தது. ஆனால் யானையைக் கொல்ல நினைத்த காரணத்தால், சிலந்தி மனிதனாக பிறவி எடுத்தது. சிலந்தியாக இருந்து சிவ கைங்கரியம் செய்ததால், அரச குலத்தில் பிறந்தது.
சோழ மன்னனான சுபதேவருக்கும், கமலவதிக்கும் வெகு காலமாக குழந்தைப் பேறு இல்லை. சிவனை தொடர்ந்து வழிபட்டு வந்ததன் பயனாக, கமலவதி கர்ப்பவதியானாள். பேறுகால நேரத்தில், ஒரு ஜோதிடர் “இந்தக் குழந்தை இன்னும் சற்று தாமதமாக பிறந்தால், உலகத்தையே ஆள்வான்” என்று சொல்லவே, கமலவதி “இன்னும் கொஞ்ச நேரம் வலி தாங்குவேன்” என்று அரசனிடம் கூறிவிட்டு, தலைகீழாகத் தொங்கினாள். ஜோதிடர் குறிப்பிட்ட நேரம் வந்ததும், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே, சிலந்தியாக இருந்து மனிதப் பிறப்பெடுத்து பின்னாளில், சோழ மன்னர்களில் சிறப்பானவனாக வாழ்ந்த கோட்செங்கட்சோழன்.
இந்த மன்னன் வீரத்திலும், தீரத்திலும் சிறந்தவனாக விளங்கினான். தன்னுடைய முற்பிறவியை அறிந்த காரணத்தால், அவன் எழுப்பிய சிவன் கோவில்கள் அனைத்தையும் மாடக் கோவில்களாக கட்டி எழுப்பினான். அதாவது யானைகள் ஏறி வர முடியாத ஆலயங்களாக கட்டினான். கோச்செங்கட் சோழ நாயனார், தன்னுடைய இறுதி நாட்களில் தில்லையில் தங்கி இறைவனை மூன்று வேளையும் வழிபட்டு இறுதியில் சிவகதி அடைந்தார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..