18,May 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி

திருச்செந்தூர் ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது.

பெரும்பாலான ஆலயங்கள், கடற்கரையில் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின் பலம் கருதியும் இதுபோல் செய்வார்கள். ஆனால் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், கடற்கரையில் இருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோவிலின் ராஜகோபுரம் இருப்பதும் கடற்கரையில் இருந்து வெறும் 140 மீட்டரில்தான்.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோவிலின் கருவறை. இது தரைமட்டத்தில் இருந்து 15 அடியும், கடல் மட்டத்தில் இருந்து 10 அடியும் தாழ்வான இடத்திலும் அமையப்பெற்றுள்ளது. திருச்செந்தூர் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன்படி இந்த ஆலயம் கட்டப்பட்டு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைக் கட்டியவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும், இந்த ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது. மற்ற இருவருக்கும் வேறு இடங்களில் சமாதி இடம்பெற்றுள்ளது. அந்த ஐவரைப்பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

மவுனசுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி, வள்ளி நாயக சுவாமி, தேசிய மூர்த்தி சவாமி. இவர்கள் ஐவர் தான், திருச்செந்தூர் கோவிலின் திருப்பணியைச் செய்தவர்கள். இதில் முதல் மூன்று நபர்கள்தான், ஆலயத்தின் ராஜகோபுரத்தைக் கட்டியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

முதல் மூவர்களான மவுன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் அருகிலேயே இருக்கிறது. அதாவது கோவிலில் எதிரில் சற்று தூரம் சென்றால் நாழிக்கிணறு இருக்கும். இது முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட நன்னீர் ஊற்று என்று புராணம் சொல்கிறது. இந்த நாழிக்கிணற்றின் தெற்கேதான், மவுன சுவாமி, ஆறுமுக சுவாமி, காசி சுவாமி ஆகியோரின் சமாதி அமைந்திருக்கிறது.

நான்காவதாக, வள்ளிநாயகசுவாமியின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது. ஐந்தாவதாக, தேசிய மூர்த்தி சுவாமியின் ஜீவசமாதியை தரிசிக்க, திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்ல வேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அங்குதான், தேசிய மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது.

முதல் மூன்று அடியார்களின் ஜீவசமாதியை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மற்ற இருவரின் ஜீவ சமாதியை பலரும் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அடியாருக்கு அடியாரான முருகப்பெருமானின், கோவில் திருப்பணி செய்தவர்களை தரிசிக்கும் அந்த நல்ல வாய்ப்பை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு