இவ்வருடத்திற்கான ஆடிப்பிறப்பு இன்றாகும். ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.
முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் - இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.
அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள்.
குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காகவே.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார்.
ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது.
தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.
ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்று ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது.
0 Comments
No Comments Here ..