முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இது அவருக்கு சாதாரணமாகக் கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.
நட்சத்திர அந்தஸ்து
புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன. படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.
தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
இயக்குனர்களின் நடிகர்
24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் 'சூரரைப் போற்று' படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
மல்ட்டிஸ்டாரர் நடிகர்
சூர்யாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' இரட்டை நாயகர்கள் படம். அதில் விஜய்யும் நடித்திருந்தார். அதற்கடுத்து விஜயகாந்துடன் 'பெரியண்ணா' மீண்டும் விஜய்யுடன் 'ப்ரண்ட்ஸ்', விக்ரமுடன் 'பிதாமகன், மோகன்லால், ஆர்யாவுடன் 'காப்பான்' என தமிழில் அதிக மல்டிஸ்டாரர் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் சூர்யாதான். அதேபோல் 'குசேலன்', 'அவன் இவன்', 'மன்மதன் அம்பு', 'கோ', 'சென்னையில் ஒரு நாள்', 'கடைக்குட்டி சிங்கம்' என மற்ற நடிகர்களின் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களிலும் சூர்யா நடித்திருக்கிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்
திரைப்பட நட்சத்திரங்கள் திரையைத் தாண்டி அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற விதியை உடைத்தவர் சூர்யா. அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், கலை விழாக்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடிஸ்வரன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலமாகவும் வீடுகளிலும் மக்களின் உள்ளங்களிலும் நுழைந்தார்.
தரமான தயாரிப்பாளர்
2015-ல் 2டி என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. தன் மனைவியான ஜோதிகாவை கதையின் நாயகியாக்கி '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் மூலம் ஜோதிகா என்னும் திறமை வாய்ந்த நடிகையின் மறு அறிமுகமும் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்ஸும் சாத்தியமானது. இதைத் தவிர 'பசங்க 2', '24', 'கடைக்குட்டி சிங்கம்' 'உறியடி 2' என பல வகையான தரமான படங்களைத் தயாரித்திருக்கிறார். 'கடுகு', 'சில்லுக் கருப்பட்டி' போன்ற தரமான சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
சமூகநலப் பணிகள்
எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006-ல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்து அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல் ஆளாக சூர்யாதான் குரல் கொடுத்தார்.
இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், சமூக அக்கறை கொண்டவர் என பல முகங்கள் கொண்டு தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் சூர்யா, இன்னும் பல சாதனைகள் படைத்து நலமுடன் வாழ மாலைமலர் இணையதளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..