வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக அமைந்திருக்கிறது.
புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக பணிகளில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது. அவர்களுக்கு வீட்டு வேலையுடன், அலுவலக பணியும் ஒரு அங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. வீட்டில் மகள், மனைவி, அம்மா என்ற உறவு பந்தத்துடன் சுழல்பவர்கள், அலுவலக பணியிலும் பன்முக திறமையுடன் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். வீட்டு வேலைப்பளுவுக்கு மத்தியில் அலுவலக பணியில் கவனம் செலுத்தும் பெண்களின் மன நிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி சர்வே ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அலுவலக பணிகளோடு உடன் பணியாற்றும் ஆண்களோடு நட்பை எப்படி கையாளுகிறார்கள் என்பது பற்றிய ரகசியமான, ருசிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது பற்றிய விவரம்:
இந்த சர்வே திருமணமான பெண்களைமையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கேற்ற பெண்கள் 26 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். பொதுவாகவே அனைத்து அலுவலகங்களிலும் பணி புரியும் பெண்களுடன் ஆண்களும் இருப்பார்கள். பணி நிமித்தமாக அவர்களுடன் நட்புறவை பேண வேண்டியிருக்கும். ‘அத்தகைய அலுவலக நண்பர்களை வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்மார்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள்?’ என்பது சர்வேயில் இடம்பெற்ற கேள்விகளுள் ஒன்று.
அந்த கேள்விக்கு 62 சதவீத பெண்கள், ‘எங்கள் அலுவலக நண்பர்களை பற்றி கணவர்மார்கள் அதிகம் கண்டு் கொள்வதில்லை. எங்கள் நட்பு பணி சார்ந்ததாகவே இருக்கும் என்று நினைத்து அதில் தலையிடுவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீத பெண்கள், ‘அலுவலக நண்பர்கள் - குடும்ப நண்பர்கள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே மாதிரிதான். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படு வதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அலுவ லகத்தில் நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை. அலுவலக வேலையோடு அவர்களுடைய தொடர்பும் முடிந்துவிடுகிறது’ என்று 14 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள பெண்கள் ‘ஆண் நண்பர்கள் வைத்திருந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்படும்.
அதனால் யாரையும் நண்பராக்குவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.‘அலுவலக ஆண் நண்பரை பழைய காதலரை போன்று ரொம்ப முக்கியமானவராக கருதுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 66 சதவீத பெண்கள், ‘இப்படிப்பட்ட கேள்விக்கே இடமில்லை. திருமணத்திற்கு பிறகு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண்களோடு காதலை போன்ற உறவு வைத்துக் கொள்வது தவறு’ என்கி றார்கள். 15 சதவீத பெண் களோ, ‘அப்படியொரு காதல் ஏற்பட்டாலும் அதை பெண்களின் சுதந்திர மாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது’ என்று கருத்து தெரிவித் திருக்கி றார்கள். ‘வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை யாகிவிடும் என்பதால் திருட்டுத் தனமான உறவுக்கு இடம் கொடுப்பதில்லை’ என்கிறார்கள் 15 சதவீத பெண்கள். 4 சதவீதம் பேர் அலுவலகத்தில் தங்களுக்கு ‘காதலர்’ இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
‘அலுவலக வேலைப்பளு பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய கணவர் ஒத்துழைப்பு கொடுக்கிறாரா?’ என்ற கேள்விக்கு எதிர்மறையான பதில்களை பதிவு செய்திருக்கிறார்கள். 35 சதவீத பெண்கள், ‘கணவர் வேலைப்பளுவை புரிந்து கொள்கிறார். ஆனால் எப்போதாவதுதான் உதவி செய்கிறார்’ என்று கூறி இருக்கிறார்கள். ‘எங்களுடைய வேலைப்பளுவை புரிந்து கொண்டு கணவர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்’ என்பது 34 சதவீத பெண்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. மீதி உள்ள பெண்களோ, ‘தங்களை பற்றி கணவர் புரிந்து கொள்வது கிடையாது. எந்த உதவியும் செய்வதில்லை’ என்று வருத்தம் கொள்கிறார்கள்.
அலுவலகத்தில் பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகிறதா? என்ற கேள்விக்கு 75 சதவீதம் பேர், ‘அந்த மாதிரியான தொந்தரவுகள் ஏற்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 10 சதவீதம் பேர், ‘அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. உற்று பார்ப்பது, அநாகரிகமாக சேட்டை செய்வது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். ‘இரட்டை அர்த்த தொனியில் பேசுவது, மோசமான உடல் வர்ணனைகளை எதிர்கொள்ள நேரிட்டதாக’ 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள். ‘வருடல், தொடுதல் போன்ற பிரச்சினைகளை சந்தித்திருப்பதாக’ மீதமுள்ள 6 சதவீதம் பேர் கூறுகிறார்கள்.
‘படிக்கும்போதே கனவு கண்டது போன்றே அலுவலக வேலையும், வாழ்க்கையும் அமைந்திருக்கிறதா?’ என்பதற்கு 44 சதவீதம் பேர் ‘அப்படி அமையவில்லை. அத்தகைய கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்த வாழ்க்கைக்கு தக்கப்படி வாழ பழகிவிட்டதாக’ கூறுகிறார்கள். ‘எங்களுக்கு கனவு காணும் பழக்கம் கிடையாது. அதன் படி எதுவும் நடக்காது என்பது எங்களுக்கு தெரியும்’ என்கிறார்கள் 26 சதவீதம் பேர். அதற்கு மாறாக, ‘தாங்கள் கனவு கண்டது போலவே பணியும் வாழ்க்கையும் கிடைத்திருப்பதாக’ 16 சதவீதம் பேர் சொல்கிறார்கள். மீதமுள்ள 15 சதவீதம் பேர், ‘தாங்கள் எதிர்பார்த்ததை விட வேலை மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது’ என்கிறார்கள்.
வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக அமைந்திருக்கிறது. அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சில பெண்கள் பணி நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை போக்குவரத்திற்கே செலவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அலுவலகத்திற்கு செல்லும்போது போக்குவரத்தை சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்ற கேள்விக்கு 66 சதவீத பெண்கள், ‘சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடிவதில்லை. சரியான நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு போக்குவரத்து பிரச்சினைக்குரியதாக இருக்கிறது’ என்கிறார்கள். 30 சதவீத பெண்கள், ‘இருசக்கர வாகனம், பஸ் என எதில் சென்றாலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஆரோக்கிய பிரச்சினை ஏற்படுகிறது’ என்கிறார்கள். ‘பயண நேரங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுவதாக’ 4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பஸ், ரெயில் வாகன பயணங்களில் பதற்றமான சூழலை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள். தாங்கள் பயணம் செய்யும் வாகனங்கள் ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும்போதும் பதற்றத்தோடுநேரத்தை பார்த்துக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் செய்து விடுவோமா? என்ற கவலை அவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் ‘பீக் அவர்ஸ்’சில் அத்தகைய அவஸ்தைகளை அதிகம் அனுபவிப்பதாக சொல்கிறார்கள்.
பெண்கள் அலுவலக நட்பை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி குடும்ப நல ஆலோசகர் சொல்கிறார்:
‘‘அலுவலக நட்பை அதன் எல்லையோடு நிறுத்திக்கொள்வதுதான் குடும்ப வாழ்க்கைக்கு அழகானது. அலுவலக நட்புக்கான எல்லை எதுவரை இருக்கலாம் என்பது அவரவருடைய கணவரின் சுபாவத்தை பொருத்து அமைத்துக்கொள்ள வேண்டும். கணவருக்கு அந்த நட்பு பிடிக்கவில்லை என்றால் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘அலுவலகத்தில் தனக்கு எந்த மாதிரியான நண்பர் இருக்கிறார், அவருடன் உறவை எந்த அளவுக்கு பேணிக்கொண்டிருக்கிறோம்’ என்பது பற்றி குடும்பத்தில் உள்ளவர்களிடம் பெண்கள் தெரிவிப்பது நல்லது. அலுவலக நட்பை வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால் அது பின்னாளில் பூதாகரமான பிரச்சினைக்கு வழிவகுத்துவிடக்கூடும்’’ என்கிறார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..