அதிகாரிகள், வீரர்கள், கப்பல் ஊழியர்கள் என சுமார் 1700 பேர் தங்கும் அளவுக்கு 2300 கேபின் அறைகள் வசதி விக்ராந்த் கப்பலில் உள்ளது.
‘விக்ராந்த்’ எனப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவின் வெற்றிக்கு விக்ராந்த் போர்க்கப்பல் மிக முக்கிய பங்காற்றியது. அதை நினைவு கூரும் வகையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு விக்ராந்த் என்று அதனுடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.
விக்ராந்த் போர்க்கப்பலின் முதல் சோதனை ஓட்டம் கடந்த 4-ந்தேதி கேரள மாநிலம் கொச்சியை யொட்டிய கடல் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் கடற்படையின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கப்பட்டது.
இதன்மூலம் ஒருங்கிணைந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, கட்டுமானத்தை மேற்கொள்ளும் திறன்கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த நிலையில் விக்ராந்த் போர்க்கப்பல் தனது முதல் சோதனை ஓட்டத்தை நேற்று நிறைவு செய்தது. 5 நாட்கள் இந்த சோதனை ஓட்டம் நடந்தது.சோதனை ஓட்டத்தின் போது கப்பலின் செயல்திறன் திருப்தி அளிக்கும் விதத்தில் இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இந்திய கடற்படையின் செய்தித்தொடர்பாளர் விவேக் மத்வால் கூறியதாவது:-
விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம், சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலின் கட்டுமான பணி கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது.
ரூ.23 ஆயிரம் கோடியில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் மிக்-29கே ரக ஹெலிகாப்டர்கள், காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்-60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியும். அதிகாரிகள், வீரர்கள், கப்பல் ஊழியர்கள் என சுமார் 1700 பேர் தங்கும் அளவுக்கு 2300 கேபின் அறைகள் வசதி இந்த கப்பலில் உள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளிலும் கப்பலின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..