திருக்கோவில் திருவிழாக்களை ஒத்தி வைக்குமாறு அல்லது பக்தர்கள் இன்றி திருவிழாவை நடாத்துமாறு அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அண்மைய நாட்களாக கொரோனா பெருந்தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் இலங்கையில் தினமும் 100 மரணங்கள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் சைவத் திருக்கோவில்களில் சுகாதார நடைமுறைகளை புறக்கணித்து பலர் ஒன்று கூடி வருவதும் அதனால் வரும் விரும்பத்தகாத விளைவுகளும் கவலை தருகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பக்கச்சார்பான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆதங்கம் எழுந்தாலும் இப்போது உள்ள நிலைமையின் தீவிரத்தை சைவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எது எவ்வாறாயினும் டெல்டா பரவல் / அதிகரித்த தொற்றுக்கள் / மரணங்கள் / ஒட்சிசன் தேவைப்பாடு / நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் என நாடு மிகவும் அபாய கட்டத்தில் உள்ள இந்நேரம் பெருந் திருவிழாக்கள் / ஒன்றுகூடல்களை தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த முக்கிய கடமையை திருக்கோவில்கள் சரிவர ஆற்ற அனைத்து சைவப் பெரியார்களும் அமைப்புக்களும் குரல் கொடுத்து ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகும்.
தவறின் கொவிட் உயிரிழப்புகளிற்கு சமயம் பழி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என இந்த பெருந் தொற்றுக் காலத்தில் விநயமாக சுட்டி நிற்கின்றோம் - என்றுள்ளது.
0 Comments
No Comments Here ..