கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை போடப்படும் கால் பாதச்சுவடு, வெண்ணெய் மற்றும் சீடை, முறுக்கு நைவேத்தியம் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
கிருஷ்ணன் அவதரித்த தினமே, ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியில் பிறந்த காரணத்தால், இந்த நாளை ‘கோகுலாஷ்டமி’ என்றும் அழைப்பார்கள்.
பசு
கிருஷ்ணனை ‘கோபாலன்’ என்று அழைப்பார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். பசு என்பது மாட்டை மட்டும் குறிப்பதல்ல, அது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கும் சொல்லாகும். வனத்திற்குள் சென்று கண்ணன், பசு மேய்த்ததன் உண்மையான உட்பொருள் ஒன்று உண்டு. மனம் என்பது காட்டை குறிக்கும். தீய குணங்கள் என்னும் கொடிய மிருகங்களும் நடமாடும் இடம் அது. அந்த வனத்திற்குள் கண்ணன் நுழைந்துவிட்டால், நம் மனமானது ‘பிருந்தாவனம்’ போல் ஆகிவிடும். தீயகுணங்கள் யாவும் மறைந்து, மணம் வீசும் துளசியைப் போல நற்பண்புகள் மனதில் துளிர்விடும்.
கிருஷ்ணன் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது, தலையில் மயில் இறகு, கையில் புல்லாங்குழல் தாங்கிய அவரது உருவம்தான். அதே போல் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை போடப்படும் கால் பாதச் சுவடு, வெண்ணெய் மற்றும் சீடை, முறுக்கு நைவேத்தியம், உறியடி பானை உள்ளிட்ட சில அடையாளங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு அடையாளங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்...
திருவடி சுவடு
கிருஷ்ணனின் வாழ்வில் அவனது குழந்தைப் பருவ லீலைகளே அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டது. அந்த குழந்தைக் கண்ணன் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். எனவே தான் கிருஷ்ண ஜெயந்தி நாளில், கண்ணன் தங்கள் இல்லத்திற்கு வருவதாக பாவித்து, அவனது திருவடி சுவடை, அரிசி மாவில் பதிப்பார்கள். இறைவன் அனைத்து இடங்களிலும் இருக்கும் தனித்துவம் மிக்கவன் என்பதை எடுத்துரைப்பதற்காகவும், அனைத்து வீடுகளிலும் கண்ணனின் பாதச் சுவடு பதிக்கப்படுகிறது.
உறியடி
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய விளையாட்டு ‘உறியடி’ நிகழ்வு. இதில் மண்பானையை கட்டி இளைஞர்கள் உடைப்பார்கள். கிருஷ்ணன், தன்னுடைய சிறுவயதில், கோபியர் சுமந்து செல்லும் பால், தயிர் கொண்ட மண் பானைகளை விளையாட்டாக உடைத்ததை நினைவு கூரும் வகையில் இது நடத்தப்பட்டாலும், அதற்குள் சிறந்த தத்துவம் பொதித்துள்ளது.
மண் பானைக்குள் உள்ள வெற்றிடத்துக்கு ‘ஆகாயம்’ (வெளி) என்று பொருள். அதே ஆகாயம்தான் பானைக்கு புறத்திலும் உள்ளது. பானை உடையும் போது, உள்ளே உள்ள ஆகாயம், வெளியே உள்ள ஆகாயத்துடன் இரண்டற கலக்கிறது. அதுபோல் ஜீவாத்மா, மாயை என்ற மண் பானைக்குள் கிடக்கிறது. அது இறைவனை நினைக்கும் ஞானத்தால் உடைபடுகிறது. பின் ஜீவாத்மா, பரமாத்மாவோடு இணைந்து, ஜீவ முக்தியைப் பெறுகிறது என்பதே அந்த தத்துவம்.
மயில் இறகு
திருமாலின் அவதாரம் தான், கிருஷ்ணன். திருமால் எப்போதுமே அலங்காரப் பிரியர். பட்டுப் பீதாம்பர உடை, எண்ணற்ற ஆபரணங்கள், மணி மகுடம் என்று அலங்கரித்திருந்தாலும், கண்ணனின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவனது தலையில் இருக்கும் மயில் இறகு என்றால் அது மிகையல்ல. கண்ணன் நினைத்திருந்தால் மிகப்பெரும் செல்வாக்குடன் தரணியை ஆண்டிருக்க முடியும். ஆனால் அவன், ஆயர்பாடி சிறுவர்களுடன் சேர்ந்து மண்ணில் புரண்டு விளையாடினான். ஆனாலும் மறைக்க முடியாத மலரின் நறுமணத்தைப் போல, கிருஷ்ணனின் முகம் தெய்வீக ஒளி வீசியது. சிறு வயதிலேயே பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் மதியுகம் பெற்றவனாக விளங்கினான். அதனால் அவன் மீது அன்பும் பாசமும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள், கண்ணனை கவுரவிக்க நினைத்தனர். ஒருநாள் வனத்தில் இருந்தபோது, அங்கே சுற்றித்திரிந்த மயிலைப் பிடித்து, அதன் ஓர் இறகை கிருஷ்ணனின் தலையில் வைத்தனர். அதுவே கண்ணனின் சிறப்பான அடையாளமாக மாறிப்போனது.
வெண்ணெய்
கண்ணனுக்கு பிடித்த உணவில் ‘வெண்ணெய்’ முக்கியமானது. அவன் வெண்ணெய் பிரியன் என்பதால் ‘நவநீத சோரன்’ என்றும் அழைக்கப்பட்டான். ‘நவநீதம்’ என்பதற்கு ‘வெண்ணெய்’ என்று பொருள். மோரை கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு, அதை மோரிலோ, நீரிலோ போட்டால் அது கரையாது. உலக மயக்கத்தில் இருக்கும் மனதை, வெண்ணெய் போல பிரித்து, கண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு மனம் உலக ஆசைகளில் ஒன்றாது, கிருஷ்ணனிடம் நிலைத்துவிடும் என்பதை விளக்கும் தத்துவமே வெண்ணெய் நைவேத்தியம்.
புல்லாங்குழல்
கிருஷ்ணனின் கையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள், புல்லாங்குழல். அதை இசைப்பதில் கண்ணன் வல்லவன். அவன் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை . புல்லாங்குழலில் இருந்து சுவரங்கள் பிறக்க, அதை இசைப்பவனின் பிராண சக்தியும், குழலில் உள்ள துளைகளும், இசைப்பவனின் விரல் பதங்களும் தேவைப்படுகின்றன. மனித உடலும் துளைகளால் அமைந்ததுதான். அவை கழிவுகளை வெளியேற்றுகின்றன. அழியக்கூடிய இந்த உடலை இறை சேவைக்காக அர்ப்பணித்தால், அதுவே புல்லாங்குழல் போல புனிதமாகிவிடும். கிருஷ்ண சிந்தனை என்ற‘பூரகத்தை’ (மூச்சை உள்ளிழுத்தல்) செய்து, கிருஷ்ண தியானம் என்னும் ‘கும்பகம்’ (மூச்சை உள்ளடக்குதல்) பயின்று, கிருஷ்ண நாம கீர்த்தனம் என்னும் ‘ரோசகத்தை’ (மூச்சை வெளியிடுதல்) செய்தால், யோகியாக மாறலாம். அதன் மூலம் மனதில் உள்ள தீய குணங்கள் என்னும் கழிவுகள் தாமாகவே வெளியேறிவிடும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..