8 .09. 21 சுவிற்சர்லாந்து அரசின் முடிவு
எதிர்வரும் 13.09.21 திங்கள்முதல் மகுடநுண்ணித் தொற்றிற்கு (கோவிட்) தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், தொற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்களும், நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்களும்மட்டுமே பொது வாழ்விடங்களில் நுழையலாம்.
16 வயதிற்கு உட்பட்டோருக்கு இச்சான்றிதழ் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிச்சான்று எத்துறைகளுக்கு கட்டாயமாக்கப்படுகின்றது?
தங்குவிடுதிகளின் உள்ளரங்குகளில், மதுநிலையங்கள் மற்றும் உணவகங்கள், அதுபோல் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிலையங்கள், நாடக அரங்கு, திரையரங்கு, சூதாட்ட விடுதிகள், நீச்சல்நிலையங்கள், அருங்காட்சியங்கள், விலங்குகாட்சிசாலை, இதுபோன்றவற்றிக்கும் தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படுகின்றது.
உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளும் (இசைக்கச்சேரி, விiளாயட்டு நிகழ்வு, மன்ற நிகழ்வுகள், பொது இடத்தில் நடைபெறும் தனியார் திருமண விழாக்கள், என்பனவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் எதிர்காலத்தில் கட்டாயமாகும்.
விலக்கு உண்டா?
பொதுப்போக்குவரத்து, வணிகநிலையங்கள், மற்றும் வானூர்திநிலையங்களில் புடைபெயர்வு (ரிறன்சிற்) பகுதிகளுக்கும் தனியார் இடங்களில் 30 ஆட்களுக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்வுகளுக்கும் தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கப்படுகின்றது.
அதுபோல் சமயவழிபாடு மற்றும் அரசியல் கருத்தினை வெளிப்படுத்தும் அரசியல் பேரணிகளுக்கும் 50 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை.
பாராளுமன்றக் கூட்டங்களுக்கும், ஊராட்சி மன்றக்கூட்டங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
தனிநபர்கள் அரசசெயலகங்களில் பயனாளிகளாக செல்லும்போதும், அதுபோல் தனி ஆட்கள் நாளாந்த செயற்பாடுகளில், எடுத்துக்காட்டாகமுடிதிருத்த நிலையம், மருத்துவ தேவை, மதியுரை வேண்டுகை, சமூக நிலையங்களில் விருந்தோம்பல் பணிகளுக்கு தடுப்பூசிச் சான்று தேவையில்லை.
விளையாட்டு மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகள்?
உள்ளரங்குகளில் நடைபெறும் உடற்பயிற்சி அல்லது இசை நாடக ஒத்திகைகளில் ஒரு இடத்தில் ஆகக்கூடியது 30 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை.
அதுபோல் பல அறைகள் போதிய இடைவெளியுடன் இருப்பின் ஒரு அறைக்குள் 30 ஆட்கள் எனப் பிரிக்க வாய்ப்பு இருப்பின் அவர்கள் தடுப்பூசிச்சான்றிதழ் முறையைக் கடைப்பிடிக்க தேவையில்லை.
01.10.2021 முதல் கட்டணம்
தடுப்பூசி இடாதோர் பொதுநிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாது, அவர்கள் தொடர்வினை விளைபொருள் (பி.சீ.ஆர்) பரிசோதனை ஊடாக தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தால் மட்டுமே பொது வாழ்விடங்களுக்கு செல்லலாம்.
அவ்வாறு பரிசோதனை செய்வதற்கு இதுவரை சுவிஸ் அரசு கட்டணத்தை ஏற்றுவந்தது. ஆனால் 01.10.21 முதல்இக்கட்டணங்களை பரிசோதனை செய்பவரே முழுமையாக செலுத்த வேண்டும்.
மகுடநுண்ணித் தொற்று ஏற்பட்டிருப்பாதாக மருத்துவமனையோ - மருத்துவரோ ஐயம்கொண்டு எவருக்காவது பரிசோதனை செய்தால் அதற்கான செலவை சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும், ஆனால் அவர்களுக்கு தொற்றுப்பரிசோதனை செய்தமைக்கு சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
16 வயதிற்கு உட்பட்டவர்களுக்குமகுடநுண்ணித் தொற்று விரைவுப்பரிசோதனை தொடர்ந்து கட்டணமற்று வழங்கப்படும், கட்டணத்தினை சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும்.
தொழிலிடங்களில் தடுப்பூசிச்சான்று தேவையா?
தொழிலிடங்களில் உணவுவிடுதி உட்பட சான்றிதழ் கட்டாயம் கிடையாது. பணிசெய்வோரும் தடுப்பூசி சான்றிதழ் காட்டத் தேவையில்லை.
ஆனால் ஒவ்வொரு நிறுவனங்களும் தமது பணியாளர்கள் உரிய தடுப்பூசி முழுமையாக இட்டுக்கொண்டனரா என்பதை உறுதிப்படுத்தும் உரிமையினை சுவிஸ் அரசு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பயன்படுத்தலாமா?
எடுத்துக்காட்டாக நலவாழ்வுத் துறையில், மருத்துவமனையில் பணிசெய்யும் பணியாளர் மகுடநுண்ணித் தடுப்பூசியை இட்டுக்கொண்டனரா, அதன்பயன் பயனாளர்களுக்கு உரிய காப்பு அளிக்கப்படுகின்றதாஎனும் அக்கறையில் சான்றிதழை பயன்படுத்தலாம். ஆனால் தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்களை பாகுபடுத்த நிறுவனங்கள் தடுப்பூசிசான்றினைப்பயன்படுத்தக்கூடாது என சுவிஸ் அரசு வேண்டுகை வைத்துள்ளது.
பொதுவாழ்விடங்களில் தடுப்பூசிச்சான்று எப்போது வரை செல்லும்?
இந்நடவடிக்கை எதிர்வரும் 24. 01. 2022 வரைக்கும் முதற்கட்டமாக செல்லுபடியாகும். எதிர்வரும் நாட்கள் எப்படி அமைகின்றது என்பதே சுவிஸ் அரசின் அடுத்த கட்ட முடிவை எட்ட வழிசெய்யும். நோய்த்தொற்று கட்டடுப்பாட்டிற்குள் வந்து, மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வோர் தொகை விரைந்து குறைவடைந்தால், இச்சான்றிதழ் கட்டாயமும் விரைந்து மீளப்பெற்றுப்கொள்ளப்படலாம்.
தடுப்பூசி சான்று காட்டப்படும் இடத்தில் வேறு தளர்வு உண்டா?
தடுப்பூசி முழுமையாக இட்டுக்கொண்ட சான்றுடன் நடைபெறும் நிகழ்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள காப்பமைவு விதியான கட்டாய முகவுறைக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருள் நிகழ்வில் பங்கெடுக்கும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி இட்டுக்கொண்டது உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் முகவுறை அணியத் தேவையில்லை. தற்காலத்தில் நடனவிடுதிகளிலும், பெருநிகழ்வுகளிலும்இம்முறைமை ஆயப்பட்டபோது, அங்கு தொற்றுக்கூடவில்லைஎன்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது என எடுத்துக்காட்டப்பட்டது.
தடுப்பூசி சான்று மீறப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தடுப்பூசி சான்றினை உறுதிப்படுத்த கடமைப்பட்டவர்கள்ஆவார்கள்.
நிகழ்வுகளில் சான்றுகள் கடைப்பிடிக்காவிடின் விதிமீறும் ஒவ்வொருவரும் தலா 100.—பிராங்குகள் தண்டனைப்பணம் செலுத்த வேண்டும்.
நிகழ்வு ஏற்பாட்டு நிறுவனம் சுவிஸ் அரசால் நிலையாக இழுத்துமூடப்படும் வாய்ப்பும் உண்டு.
நடைபெறுகின்ற நிகழ்வுகளில் தடுப்பூசி சான்று உரியமுறையில் பரிசோதிக்கப்பட்டுபதியும் பொறுப்பினை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் முழுமையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு, சுவிற்சர்லாந்தின்நடுவனரசு மாநில அரசுகளிடம் அளித்துள்ளது!
தொகுப்பு: சிவமகிழி
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..