21,Nov 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

உங்கள் வாழ்க்கைப்பயணம் சிறப்பாக அமைய வேண்டுமா?

மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான் இறைவன்.

இந்த பூமியில் வாழும் மனிதர்களை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைவன் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றான். மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவன் அனுப்பிய நபிமார்களும் அதன்படியே வாழ்ந்து மக்களை நேர்வழிப்படுத்த வழிகாட்டினார்கள்.

திருக்குர்ஆனும், நபிமொழிகளும் மனிதர்களை நேர்வழியில் நடக்க வலியுறுத்தினாலும் அதில் இருந்து மாறுபட்டு நடக்கவே மனித மனம் துடிக்கின்றது.

இன்றைய மனிதனின் வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்று சிந்தித்துப்பார்த்தால் உள்ளம் நடுங்கவே செய்யும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் மனம் விரும்பிய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே மனிதன் ஆசைப்படுகிறான். அந்த ஆசையின் விளைவாக அதன்படி நடக்கவும் துணிகின்றான்.

இந்த உலக வாழ்க்கை சோதனை நிறைந்தது. மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான், இறைவன்.

இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி, மேலும் பொருள்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்”. (திருக்குர்ஆன் 2:155).

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).

“உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது”. (திருக்குர்ஆன் 64:15).

இறைவனின் சோதனையில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்கவே முடியாது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவன் இறைவனின் சோதனைக்கு ஆளாகியே தீரவேண்டும். அவ்வாறு சோதனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு கேடயமாக இருக்கக்கூடியவை திருக்குர்ஆன் ஓதுதல், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஸதகா அளித்தல் போன்றவையாகும். இறையச்சத்துடன் கூடிய தொழுகையுடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அதையும் மீறி இறைவனின் சோதனை வந்தால் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடமே அதில் இருந்து மீண்டுவர உதவி தேடவேண்டும். இதையே திருக்குர்ஆன் (2:156) குறிப்பிடும்போது, “(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள்”, என்று தெளிவாக கூறுகின்றது.

ஆனால் எல்லா மனிதர்களும் இப்படி இருப்பதில்லை. இன்பம் வரும் போது இறைவனை மறந்து விடுகிறார்கள். இது இறைவன் தங்களுக்கு அளித்த நற்கொடை என்பதை நினைக்கத்தவறிவிடுகிறார்கள். தங்களது உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்கள். பின்னர் சோதனை ஏற்படும் போது இறைவனை தஞ்சமடைய மறுத்து ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் கடுமையான நஷ்டமும், வேதனையும் இருக்கிறது என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்”. (திருக்குர்ஆன் 22:11).

“மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 39:49).

எனவே, நமக்கு நன்மைகள் வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். அதைத்தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். அந்த நன்மையின் மூலம் நாம் மட்டுமின்றி பிறரும் நன்மை அடையும்படி செயல்படுவோம். இதேபோல சோதனைகள் வந்தால் அதையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோம். இறைவனை அடி பணிந்து அந்த சோதனையில் இருந்து மீண்டுவர வழிகாட்டும்படி பிரார்த்தனை செய்வோம்.

அல்லாஹ் வாரி வழங்குவதில் இணையற்ற வள்ளல் தன்மை மிக்கவன். தன்னை அடிபணிந்து வணங்கிய அடியார்களின் கரங்களை வெறுமையாக அனுப்புவதில்லை. அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானம் மிக்கவன், இரக்க குணம் உள்ளவன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவனிடமே சரண் அடைவோம். அவனிடமே பாதுகாப்பு கேட்போம். இறைவன் அருள்மழை நம் மீது நிச்சயம் பொழியும், ஆமின்.

பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




உங்கள் வாழ்க்கைப்பயணம் சிறப்பாக அமைய வேண்டுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு