தொடர் நடைப்பயிற்சியினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம்.
உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல்... என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்கிறோம்.
நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
முதுமையை விரட்டும்
நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும்.
நடைப்பயிற்சி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.
சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.
எலும்புகள் வலுவாகும்
தொடர் நடைப்பயிற்சியினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
உடல் எடையை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென் றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகாசனப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யலாம்.
இதயத்தை வலிமையாக்கும்
வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்குமாம்.
மகிழ்ச்சியை வழங்கும்
‘நடைப்பயிற்சி, மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஹார்மோன்கள் சுரக்க உதவும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ‘ஹிப்போகாம்பஸ்’ பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாட்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்... உற்சாகம் கரை புரண்டு ஓடும்!
இயற்கை நடை
‘ட்ரெட்மில் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே அதில் நடக்கிறேன்’ என்பவர்களுக்கு ஒரு செய்தி. சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக ‘வைட்டமின் டி’ கிடைக்கும். வெளிச்சம் உள்நுழையாத நான்கு சுவர்களுக்குள் நடப்பதற்கும் இயற்கையான ‘வெளியில்’ நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், ட்ரெட்மில் இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..