ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சசிகலா, அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களுக்கும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை ஆனார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் கூறியிருந்தார்.
பின்னர் தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி சசிகலா பேசினார். அப்போது அ.தி.மு.க.வை நிச்சயம் காப்பாற்றுவேன். விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று அவர் பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சசிகலா சுற்றுப்பயணம் செல்லவில்லை.
சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு நினைவிடத்தை மூடி வைத்திருந்தது.
இதனால் சசிகலாவால் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி முதல் முறையாக நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்று சசிகலா மரியாதை செலுத்துகிறார்.
சசிகலாவை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்களும் நாளை ஜெயலலிதா நினைவிடத்தில் திரள்கிறார்கள். இதற்காக டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அவர்களும், சசிகலா ஆதரவாளர்களும் நாளை ஆயிரக்கணக்கில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் முன்பு கூடுகிறார்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சசிகலா, அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களுக்கும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் அவர் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு தி.நகரில் உள்ள இல்லத்திலேயே தங்கியிருக்கும் சசிகலா தொண்டர்கள் புடைசூழ பொதுவான இடங்களுக்கு இதுவரை சென்றதில்லை.
சமீபத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் அடைந்ததையடுத்து சசிகலா நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அவர் தனியாகவே சென்றிருந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சசிகலா வருகிற 17-ந்தேதி அன்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டம் மற்றும் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லம் ஆகியவற்றுக்கு சசிகலா செல்கிறார். அங்கு எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தி.நகரில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. கொடியை சசிகலா ஏற்றி வைக்கிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, சசிகலா தற்போதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ளார்.
எனவே அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. அந்த வகையில்தான் தனது காரில் அ.தி.மு.க. கொடியை பறக்கவிட்டுள்ளார். நாளை மறுநாள் அ.தி.மு.க. கொடியையும் அவர் ஏற்றுகிறார் என்று தெரிவித்தார்.
இந்த 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பிறகு சசிகலா சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க கூடாது என்பதில் அ.தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. கொடியை காரில் மட்டுமே பயன்படுத்தி வந்த சசிகலா நாளை மறுநாள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த பொன்விழா ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தொடர்பாகவும் அந்த கட்சியினர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டு அ.தி.மு.க. கொடியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து சசிகலா நாளை வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..