3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏரியின் ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்வளவு தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு எவ்வளவு தண்ணீர் தினமும் திறக்கப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார்.
புழல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் நடந்து சென்றும் பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா விரிவாக விளக்கி கூறினார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார், தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.
புழல் ஏரியை பார்வையிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அவரை அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விவரங்களை மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது ஏரியை திறப்பது பற்றி முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வப்போது உள்ள நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கதவணை பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். ஏரியின் கரைகள் எந்த அளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..