பஸ்கள் புறப்படுவது சம்பந்தமாக அறிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.
இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர்.
இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு பஸ்நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 10,240 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதில் கடந்த 1-ந்தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 தினசரி பஸ்களுடன் 388 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதில் 89,932 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
நேற்று (2-ந்தேதி) 7 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 வழக்கமான பஸ்களில் 1,796 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 1,575 சிறப்பு பஸ்களில் 501 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 107 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.
நேற்று இரவு 12 மணி நிலவரப்படி மொத்தம் 5,932 பஸ்களில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 918 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர இன்று அதிகாலை வரை 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றனர். மொத்தம் இதுவரை 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
நாளை தீபாவளி என்பதால் இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் பஸ் நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று 2,100 பஸ்களுடன் 1,540 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 744 பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ள www.tnstc.in, tnstcApp, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் புறப்படுவது சம்பந்தமாக அறிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு அதிக அளவில் வருவதால் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று இரவு பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்திருந்த பயணிகளிடம் எந்த ஊர்களுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டறிந்தார். சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 4 பஸ் நிலையங்களுக்கு மக்கள் சென்றுவர மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான இணைப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘பொதுமக்களின் வசதிக்காக தேவையான அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு கூட்டம் அதிகமாக உள்ளதோ அந்த ஊர்களுக்கு கூடுதலான பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் பொதுமக்கள் தாராளமாக புகார் செய்யலாம். இதற்காக 24749002, 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். பயணிகளின் வசதிக்காக 20 இடங்களில் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. அதற்கேற்ப பஸ்களும் உடனுக்குடன் வந்து பயணிகளை ஏற்றி சென்றது.
இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று மேலும் 2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இன்று வழக்கமான 2100 பஸ்களுடன், 1,540 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்துக்கு ஏற்ப தேவையான பஸ்களை இயக்கி வருகிறோம். நாளை அதிகாலை வரை சிறப்பு பஸ்கள் வந்து செல்லும். எனவே பொதுமக்கள் அரசு பஸ்களில் உடனே சொந்த ஊருக்கு செல்லலாம். அந்த அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களிலும் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அங்கும் ஏராளமான சிறப்பு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..