உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எந்த செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டால் இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்புக்குக் கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாகச் செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ‘நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளையே சாப்பிட விரும்புகிறார்கள்.
‘உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்துவருகிறார்கள்.. இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப்பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.
இதயத்தின் முக்கிய எதிரி புகை. எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.
தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தை பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..