சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி குறித்து தான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அதில், ‘1971ல் சேலத்தில் இந்துக் கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்’ என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ரஜினிக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து ரஜினிகாந்த் வீட்டில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, தனது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரஜினிகாந்த், 1971ல் திராவிடர் கழகம் நடத்திய பேரணி குறித்து பேசிய கருத்துக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
1971ல் சேலத்தில் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ராமர், சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.
இந்த விடயத்தில் நான் இல்லாததையோ, கற்பனையாகவோ எதையும் சொல்லவில்லை. 2017ல் அவுட்லுக் பத்திரிகையில் வந்த செய்தியையும் நான் கேள்விப்பட்டதையும் நான் பேசினேன்” என ரஜினி கூறினார்.
0 Comments
No Comments Here ..