18,Apr 2024 (Thu)
  
CH
விளையாட்டு

டோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த கோஹ்லி

ரோஹித் சர்மாவின் அபார சதம், விராத் கோஹ்லியின் நிதான ஆட்டம் போன்றவற்றால் பெங்களூருவில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றதோடு, விராத் கோஹ்லி அணித் தலைவராக டோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

ரோஹித் சர்மா 4 ஓட்டங்களைக் குவித்த போது சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றோர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார்.

217 இன்னிங்ஸ்களில் 9115 ஓட்டங்களைக் குவித்துள்ள ரோஹித் சர்மா, 228 இன்னிங்ஸ்களில் 9000 ஓட்டங்களைக் குவித்த கங்குலி, டெண்டுல்கர் (235 இன்னிங்ஸ்), பிரையன் லாரா (239 இன்னிங்ஸ்) ஆகியோரை இப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மிக வேகமாக 9000 ஒருநாள் ஓட்டங்களுக்கான சாதனை படைத்தோர் பட்டியலில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி (194 இன்னிங்ஸ்களில்) முதலிடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் தனது 29ஆவது ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4ஆவது வீரராக அவர் இடம்பிடித்தார்

இந்தப் பட்டியலில் தற்போது 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முன்னிலை வகிக்கிறார். விராட் கோஹ்லி 43 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 30 சதங்களுடன் ரிக்கி பொண்டிங் 3ஆம் இடத்தில் உள்ளார்.


முன்னதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியின் போது, ரோஹித் சர்மா அதிவேகமாக 7 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் எனும் சாதனையைத் தனதாக்கினார். சச்சின், ஹசிம் அம்லா ஆகியோரை ரோஹித் பின்னுக்குத் தள்ளினார்.

இதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி 89 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் தலைவராக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்) அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

கோஹ்லி தலைவராக இதுவரை 199 இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி 11,208 ஓட்டங்களைக் குவித்துள்ளார். டோனி 330 இன்னிங்ஸில் 11,207 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதேபோல, கோஹ்லி 14 ஓட்டங்களை எடுத்தபோது தலைவராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்த இலக்கை கோஹ்லி 82 போட்டிகளில் எடுத்துள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில் இந்தியாவின் டோனி (127 போட்டிகள்) இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (131 போட்டிகள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா கூட்டணியில் நேற்று 137 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை எடுத்த 5ஆவது ஜோடியாக இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




டோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த கோஹ்லி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு