29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

நற்குணங்கள் தரும் நற்பாக்கியங்கள்...

‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகள் மனிதனின் அத்தியாவசிய தேவைகள் ஆகும். இது தவிர பிறதேவைகளும் மனிதர்களுக்கு இருக்கவே செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவசியமான, முக்கியமான தேவைகள் இருக்கலாம்.

 இந்த தேவைகளை தனது உழைப்பின் மூலம் சிலர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்கள் உதவியுடன் தேவைகளை அடைந்துகொள்கிறார்கள்.

ஆனால் சில தேவைகளை நிறைவேற்றும் வல்லமை மனித சக்தியையும் மீறியதாக இருப்பதுண்டு. அதுபோன்ற சூழ்நிலையில் மனிதன் தஞ்சம் அடையும் ஒரே புகலிடம் இறைவன் மட்டுமே.

அந்த ஏக இறைவனிடம் கையேந்தி, கண்ணீர்விட்டு தனது வேண்டுதலை, தேவையை, பிரார்த்தனையை மனிதன் தெரிவிக்கின்றான். இறைவன் நாடினால் அந்த தேவை நிறைவேற்றியும் வைக்கப்படும்.

ஈமான் எனப்படும் இறையச்சத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் இறைவனிடம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நபியே! உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், அதற்கு நீங்கள் கூறுங்கள்: ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். எவரும் என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். அதனால் அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (திருக்குர்ஆன் 2:186)

“இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்”. (திருக்குர்ஆன் 40:60)


இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ் மிக தெளிவாக நமக்கு கூறுவது என்னவென்றால், “அடியார்கள் என்னையே நம்பட்டும், என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும், அப்படி அவர்கள் இறையச்சத்துடன் செய்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதில் அளிக்கிறேன்”, என்று குறிப்பிடுகின்றான்.


நபிகளார் மூலம் நமக்கு அருளப்பட்ட இந்த வசனத்தின் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நடந்து இறையச்சத்துடன் நமது தேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டும். அப்போது நமது பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதோடு, நாம் நேர்வழியையும் அடையலாம்.


அதேநேரத்தில் நமது பிரார்த்தனைகள் ஏற்கப்படவேண்டும் என்றால் நமது இறைநம்பிக்கையும், நற்செயல்களும் சிறந்ததாக இருக்க வேண்டும்.


‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.


எனவே நமது இறை நம்பிக்கை பலம்மிக்கதாக, இறைவனின் திருப்பொருத்தத்தை ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறைகளும், சொல்லும், செயலும் அமைய வேண்டும்.


திருக்குர்ஆனும், நபிகளாரும் காட்டிய வழியில் நமது அன்றாட வாழ்வும், செயல்களும் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனைகள் இறைவனின் கவனத்திற்கு செல்லும். அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்து விட்டு இறைவனிடம் கையேந்தினால் எந்த பலனும் ஏற்படாது.


நற்குணங்கள் நிரம்பிய மனித வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாக கருதப்படுகிறது. நற்குணங்களும், நற்செயல்களும் கொண்டவர்களே மக்களால் விரும்பப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இறைவனும் நேசிக்கின்றான். நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை கிடைக்கின்றது, மறுமையிலும் இறைவனிடம் நன்மையே பெறுகின்றான்.

இது குறித்த நபி மொழிகள் சொல்வது என்னவென்றால்:

‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (நூல்: அபூதாவூத்)

‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (நூல்: அஹ்மத்)

‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே’. (நூல்: திர்மதி)

‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (நூல்: இப்னு மாஜா)

‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

எனவே, நற்குணங்கள் நிரம்பியதாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனின் வழியில் நடந்து நற்செயல்களை செய்வோம். இதன் மூலம் நமது நியாயமான தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை அடைவோம், ஆமின்.

பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





நற்குணங்கள் தரும் நற்பாக்கியங்கள்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு