29,Mar 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

கிரக தோஷங்கள் நீக்கி நற்பலன் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்

பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதம் இருந்து கண் விழித்து, பெருமாளை தரிசித்தால், நம்முடைய சகல பாவங்களும், தோஷங்களும் நீங்குவதோடு, நிலையான செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11-வது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11-ம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடி வருகின்றனர்.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒருநாள் என்பதே கணக்கு என்று வேதங்கள் சொல்கின்றன. அந்த கணக்கின்படி, மார்கழி மாதம், தேவர்களுக்கு விடியற்காலை நேரமாகும். மஹாவிஷ்ணுவும் இந்த மாதத்தில் தான் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கும் மாதம். இதனால் தான் மார்கழி மாதம் சிறப்பு பெற்று விளங்குகிறது. கிருஷ்ண பரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார். அதனாலேயே வட மாநிலங்களில் ஏகாதசியை கீதா ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதமிருந்து உண்ணாமல், உறங்காமல் அந்த பரந்தாமனையே நினைத்து, அவரின் புகழினைப்பாடி, அவரின் பராக்கிரம கதைகளை படித்து வரவேண்டும். மகாவிஷ்ணு குறித்த ஆன்மீக சொற்பொழிவையும், பஜனை பாடல்களையும் பாட வேண்டும்.


ஏகாதசி விரதம் இருக்கும் போது விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷம். காரணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால், மகாவிஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும், திதி சூன்யம், பித்ரு தோஷம் ஆகியவையும் நீங்கும்.

அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து ராப்பத்து விழா என 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தை போன்று திருமலை திருப்பதியிலும் இந்த விழா நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் ரங்கநாதரையும் ஏழுமலையானையும் தரிசிப்பது சிறப்பு.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கிரக தோஷங்கள் நீக்கி நற்பலன் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு