18,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றிபெற்ற ஸிம்பாப்வே

ஓமானுக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் 14 ஓட்டங்களால் ஸிம்பாப்வே கடுமையான ஆனால் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.


இந்த வெற்றியுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

குழுநிலை தகுதிகாணில் மேற்கந்தியத் தீவுகளையும் நெதர்லாந்தையும் வெற்றிகொண்டு 4 புள்ளிகளுடன் சுப்பர் 6க்குள் நுழைந்த ஸிம்பாப்வே இப்போது அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஓமான் பெரும்பாலும் உலகக் கிண்ண வாய்ப்பை தவறவிடவுள்ளது.

ஸிம்பாப்வேயினால் நிர்ணியக்கப்பட்ட 333 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான், காஷியப் ப்ரஜாபதி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்து தோல்வி அடைந்தது.


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓமான் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஓமான் இந்த மொத்த எண்ணிக்கையை டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராக பெற்றமை வரலாற்றுச் சாதனையாகும்.

சுப்பர் 6 சுற்றை புள்ளிகளின்றி வெறுங்கையுடன் ஆரம்பித்த ஓமான், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடியபோது ஸிம்பாப்வேக்கு நெருக்கடியைக் கொடுத்தவண்ணம் இருந்தது.


ஆரம்ப வீரர் காஷியப் ப்ராஜாபதி 97 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 103 ஓட்டங்களைப் பெற்று ஒமானின் முயற்சிக்கு உரமூட்டினார்.

35ஆவது ஓவரில் ஓமான் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த ஓமானுக்கு கடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 39 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

48ஆவது ஓவரில் முதல் பந்தில் பயாஸ் பட் ஆட்டம் இழந்தார்.

30ஆவது ஓவரில் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்ற அணித் தலைவர் ஸீஷான் மக்சூத், நொண்டியவாறு மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்தார்.


அந்த ஓவரில் 7 ஓட்டங்களும் 49ஆவது ஓவரில் 3 ஓட்டங்களும் பெறப்பட ஓமானின் வெற்றி தொலைவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. கடைசி ஒவரில் 14 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் கடைசி பந்தில் மக்சூத் ஆட்டம் இழக்க ஸிம்பாப்வே 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ப்ரஜாபதியை விட அயான் கான் 47 ஓட்டங்களையும் ஆக்கிப் இலியாஸ் 45 ஓட்டங்களையும் மொஹம்மத் நடீம் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாபரனி 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டெண்டாய் சட்டாரா 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


அப் போட்டியில் முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 332 ஓட்டங்களைக் குவித்தது.

சோன் வில்லியம்ஸ் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தைக் குவித்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தார்.

ஆரம்ப வீரர்களான ஜோய்லோர்ட் கம்பீ (21), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (25) ஆகிய இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்னர் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.


எனினும் வெஸ்லி மதேவியருடன் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராஸாவுடன் 4ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களையும் ரெயான் பரியுடன் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.


103 பந்துகளை எதிர்கொண்ட சோன் வில்லியம்ஸ் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான முதல் சுற்று தகுதிகாண் போட்டியில் சோன் வில்லியம்ஸ் 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


மத்திய வரிசையில் சிக்கந்தர் ராஸா 42 ஓட்டங்களையும் லூக் ஜொங்வே ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். அவர்களைவிட வெஸ்லி மதேவியர் 23 ஓட்டங்களைப் பெற்றார்.பந்துவீச்சில் பயாஸ் பட் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்






உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றிபெற்ற ஸிம்பாப்வே

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு