01,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை நிராகரிக்கும் பெண்கள் உரிமை அமைப்புக்கள்

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் பெண்கள் உரிமை அமைப்புக்கள், இச்செயன்முறையின் ஊடாக கடன்களை மீளச்செலுத்துகை சுமை தொழிலாளர் வர்க்கத்தின்மீது சுமத்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளன. 

அதுமாத்திரமன்றி நாடு முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான நிலைபேறானதொரு தீர்வை உடனடியாக வழங்குமாறும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.



 'கடனும் பெண்களின் மனித உரிமைகளும்' என்ற தலைப்பில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை உள்ளடங்கலாக ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன், நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியினால் தமது அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அதனை உரியவாறு கையாள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்காமை என்பன பற்றிய தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 அத்தோடு இவ்விவகாரத்தில் குறிப்பாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் வரலாற்று ரீதியான மற்றும் தற்கால வகிபாகத்தையும் அவர்கள் கேள்விக்குட்படுத்தினர். 


'சாதாரண தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பு நிதியங்கள் கடன்களை மீளச்செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் கடின உழைப்பாளர்களாக இருப்போரின் ஒரேயொரு சேமிப்பாக இருக்கக்கூடிய நிதியத்தையே அரசாங்கம் ஈடுவைத்திருக்கின்றது.

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் பாரிய மீறல்கள் இடம்பெறுகின்றன. இம்மறுசீரமைப்புச் செயன்முறை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது தொழிலாளர்கள் அவர்களது பாதுகாப்பு நிமித்தமான சேமிப்பை இழந்துவிடுவார்கள்' என்று சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய கடன்நெருக்கடிக்கு மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான நிலைபேறானதொரு தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தினர்.  





கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை நிராகரிக்கும் பெண்கள் உரிமை அமைப்புக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு