நாட்டில் தாதி சேவையில் மேலும் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அவற்றை தீர்ப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சரால், அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜகத் சந்ரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் தாதி சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த 2018ஆம் ஆண்டில் தாதி பயிற்சி பெற்ற 2,500 பேரையும், 500 பட்டதாரிகளையும் தாதி சேவையில் இணைத்துக் கொள்வது இலக்காகக் காணப்பட்டது.
இதேவேளை, தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ள 2019/2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பிரிவினருக்கான விண்ணப்பங்களுக்கான வர்த்தமானியை செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள் வெளியிட சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 வருட தாதி பயிற்சிக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஜூலை மாதம் 3,315 பேர் தாதியர் மாணவர்களாக பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதோடு, 2018/2019 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகளின்படி அவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவ்வாறு இலங்கையில் தாதியர் பயிற்சி பெறும் மாணவர் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 6,700 ஆகும்.
உலகளாவிய கொவிட் அனர்த்தம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் தாதியர் ஆட்சேர்ப்பில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் தாதியர் ஆட்சேர்ப்பை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், தாதியர் சேவையில் இடமாற்றம் செய்வதற்கு முறையான இடமாற்ற நடைமுறையை பின்பற்றவும், பல வருடங்களாக ஒரே வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களை இடமாற்றத்துக்காக பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
0 Comments
No Comments Here ..