21,Nov 2024 (Thu)
  
CH
WORLDNEWS

உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி!

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது.

இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டதோடு, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாட்டுத் தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துக் கவனம் செலுத்தியதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்டுக் மாநாட்டில் பங்குபற்றியதிலிருந்து காணப்படும் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நினைவுகூர்ந்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இவ்வாறான மாநாடுகளின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோவின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி நன்றி கூறினார்.

உலக நீர் உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் வள முகாமைத்துவத்தில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான நிதிச் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் உலகளாவிய கூட்டு நிதியத்தில் பங்கேற்க இலங்கை ஆர்வமாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.

கூட்டுச் செயலகம் ஒன்றை ஆரம்பித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசியாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், இலங்கைக்கான அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளைப் பலப்படுத்த 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக ஒப்பந்தத்தில் (PTA) கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்தோனேசிய மருந்து நிறுவனங்கள் இலங்கையின் மருந்து, தடுப்பூசிச் சந்தையில் நுழைவதற்கான ஆர்வத்தையும் எடுத்துக்கூறிய இந்தோனேசிய ஜனாதிபதி, இந்தோனேசிய ஃபாம் எண்ணெய் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தித் திட்டம் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தோனேசியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த விடோடோ, நிலையான நீர் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நீர் தொடர்பிலான இராஜதந்திரம் மற்றும் அரசியல் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

அத்துடன், இந்து சமுத்திரப் பிராந்திய எல்லை நாடுகளின் ஒன்றியத்திற்கு இலங்கை தலைமைத்துவம் வகிப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த இந்தோனேசிய ஜனாதிபதி, அதற்குத் தனது பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் மலேசியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இந்தோனேசியாவுடன் வர்த்தக உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (RCEP) இணைவதன் பயன்கள் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதில் இலங்கை இணைத்துக் கொள்ளப்படுவது ஏனைய தெற்காசிய நாடுகளையும் அதில் இணைவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் குறிப்பிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி, இலங்கை சந்தைக்கு வரும் இந்தோனேசிய மருந்துகள் தொடர்பில் இலங்கை சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த இருதரப்பு கலந்துரையாடலின்போது இந்து சமுத்திர பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஆசியான் அமைப்பின் இந்தோ-பசிபிக் எதிர்கால நோக்கை ஆதரிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக நெருக்கமான இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிராந்திய வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்துவது தொடர்பிலும் இந்தோனேசியாவுடன் நிரந்தர இருதரப்பு உடன்படிக்கையில் ஈடுபடுவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது யோசனையொன்றை முன்வைத்தார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கையின் வகிபாகத்தை வலியுறுத்தி, உலகளாவிய கலப்பு நிதிக் கூட்டணிக்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, இலங்கைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், இரு நாடுகளினதும் தொடர்புடைய அமைச்சுக்களுக்கு இடையில் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பேணுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தோனேசிய ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தனது பதவிக்காலம் எதிர்வரும் காலங்களில் முடிவடையும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ஜோகோ விடோடோ, புதிய இந்தோனேசிய நிர்வாகம் இலங்கையுடனான தற்போதைய உறவுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் புதிய தலைமைத்துவத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான விஜயத்தில் இணைந்து கொள்ளுமாறு இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோவுக்கு பிரத்தியேகமாக அழைப்பு விடுத்தார்.






உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு