04,May 2025 (Sun)
  
CH
குழந்தைகள்

7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும், மீட்கும் வழிகளும்

மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது,



கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, கடந்த வாரத்தில் அந்தச் சிறுமி கடும் வயிற்றுவலி என்று கூறியதையடுத்து, அவரின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.



அப்போது அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்தபோது, இவர்களின் உறவினரான 20 வயது இளைஞர் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

மற்றொரு வழக்கில், கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளியின் தங்கையை, வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்த 22 வயது இளைஞர் இதே நாளில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 மே 2025

29 ஏப்ரல் 2025


இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், அவருடைய மைத்துனர் பெனட் ஹாரீஸ் என்பவரும் போக்சோ சட்டத்தில் கடந்த மாதத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக கோவையில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும், அதில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதிலும் சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதும் இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு காரணமாகவே புகார்கள் அதிகரிப்பு!

''இப்போது தான் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்று கூறமுடியாது. போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு காரணமாகவே, பெற்றோர் துணிவுடன் வந்து புகார் கொடுக்கின்றனர். தற்போது 12 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உறவினர் மீதே கூறப்பட்டுள்ள புகாரும் இந்த விழிப்புணர்வு காரணமாக தரப்பட்டிருப்பதுதான்.'' என்றார்.

முன்பு நிறைய குற்றங்களில் உறவினர்கள், நண்பர்கள் என்று கருதி, பலரும் புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்ததாகக் கூறும் உதவி ஆணையர் சிந்து, அதேபோல முன்பு தனியார் மருத்துவமனைகளில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்புகள் பற்றி தகவல் தராமல் இருந்ததாகவும், இப்போது எல்லோருமே முறையாக காவல்துறைக்குத் தகவல் தருவதும் இத்தகைய வழக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமென்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இதுபோல நிறைய குற்றங்கள் குறித்து, காவல்துறையின் கவனத்துக்கு வந்தாலும், பல சம்பவங்களில் புகார் கொடுக்க பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் பெற்றோரே முன் வந்து புகார் கொடுத்து இருப்பதை ஒரு நல்ல மாற்றமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'' என்றார்.

இந்த சிறுமிக்கு பெற்றோர் ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் அனுமதியிருப்பதாக உதவி ஆணையர் சிந்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் சில பெற்றோர் சிறு வயதிலேயே திருமண பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்வதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்த 12 வயது சிறுமிக்கு உடல் ரீதியான தொடர் சிகிச்சையும், கண்காணிப்பும், உளவியல் ஆலோசனையும் மிக அவசியமென்று பெண் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

''12 வயது சிறுமியான அவருக்கு இந்த கர்ப்பம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கரு கலைப்பு உடலை பெருமளவில் பலவீனப்படுத்தும் என்பதால், அந்த சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புதான் மிக முக்கியம்.'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் உஷா.

உடலியல் ரீதியாக அந்த சிறுமி மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று கூறும் மருத்துவர் உஷா, சிறுமிக்குத் தேவையான உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் மட்டுமே முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ச்சியாக, அவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரை சிகிச்சையை பாதிப்புக்கு ஆளான சிறுமி பெற வேண்டும்.



பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமிக்குத் தரப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெண் மருத்துவர் ஹரிப்ரியா தேவி சஜாத், ''முதலில் அந்த சிறுமிக்கு இடமாறுதல் அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் அவரை கண்டிக்க வேண்டுமென்று நினைக்காமல், அவர் மீது தனி கவனம் செலுத்தி, அவருக்குள் இருக்கும் உடல்ரீதியான பாதிப்புகளை அறிய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்றாலும், வீட்டிலுள்ள சூழ்நிலைதான் அவரை முழுமையாக மீட்டெடுக்க உதவும். அதை நல்ல விதமாக உருவாக்கித்தர வேண்டும்.'' என்கிறார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளுக்கு, அரசு மருத்துவமனையிலேயே உளவியல் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் காவல் அதிகாரிகள், கோவை மாநகர காவல் துறை சார்பிலும் இளவயது பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் கொடுப்பதற்கு மனநல ஆலோசகர்களை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.

சிறுமிக்குத் தரப்பட வேண்டிய உளவியல் சிகிச்சை குறித்து பேசிய மனநல மருத்துவர் சந்தோஷி, ''இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதிப்பு, அவருக்கு நேர்ந்த அனுபவம், அவருக்குள் இப்போது இருக்கும் உணர்வு, அவருடைய புரிதல் திறன் ஆகியவற்றை அறிந்தபின்பே, அவருக்கு எவ்வாறு உளவியல் சிகிச்சை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். பொதுவாக எல்லோருக்கும் தருவது போன்ற சிகிச்சையை இந்த சிறுமிக்குத் தருவது பலன் தராது.'' என்கிறார்.

இந்த நேரத்தில் அவரை உடல்ரீதியாக பலப்படுத்துவதை விட உளவியல்ரீதியாக திடப்படுத்துவது அவசியம் என்கிறார் சந்தோஷி.

இதில் மனநல மருத்துவர்களின் ஆலோசனை மிக முக்கியம் என்றாலும் அதை விட அதிமுக்கியமாகப் பங்களிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான் என மனநல மருத்துவர் சந்தோஷி கூறுகிறார்.








7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும், மீட்கும் வழிகளும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு