இந்தோனேசியாவின் பதற்றமான பப்புவா பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 18 கிளர்ச்சியாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிகள், அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1960 களின் முற்பகுதியில், இந்தோனேசியாவின் பப்புவா தீவு டச்சு காலனியாக இருந்து வந்தது. ஆனால் இப்பகுதியை இந்தோனேஷியா இணைத்துக் கொண்டது. ஐ.நா.வின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறைக்கு பின்னர் 1969 இல் பப்புவா இந்தோனேசியாவில் இணைக்கப்பட்டது. அப்போது வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாக கூறி, பப்புவா தீவில் கிளர்ச்சி படைகள் உருவாகின.இந்த கிளர்ச்சி படைகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இன்டன் ஜெயாவில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை வழங்குவதற்காக ராணுவ அமைதிப்படை முகாமிட்டுள்ளது. இந்த குழுவினரை குறி வைத்து, இராணுவ தர ஆயுதங்கள் மற்றும் அம்புகளுடன், ஆயுதம் ஏந்திய ஏராளமான கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 20 பேர் உயிரிழந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இவான் ட்வி பிரிஹார்டோனோ கூறினார்.
இதனிடையே கிளர்ச்சி படையான மேற்கு பப்புவா விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செப்பி சம்போம் கூறுகையில், தங்கள் குழுவில் 3 பேர் மூன்று பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறினார். மீதமுள்ளவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட "அப்பாவி பொதுமக்கள்" என்று அவர் கூறினார்.













0 Comments
No Comments Here ..