கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் மாதிரி மதிய உணவு திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் (04) காலை பேலியகொடையில் உள்ள பாத்ஃபைண்டர் அறக்கட்டளை தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவின் பெங்களூரை தலைமையமாகக் கொண்ட அக்ஷய பாத்ரா அறக்கட்டளை, இலவச பாடசாலை உணவை வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
16 இந்திய மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளை, தற்போது 23,581 பாடசாலைகளில் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் சத்தான மதிய உணவை வழங்குகிறது.
இதன் செயல்பாடுகள் 78 மத்திய சமையலறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரங்களை பின்பற்றுகின்றன. இந்திய அரசாங்கத்தின் முதன்மையான “PM POSHAN” ஊட்டச்சத்து திட்டத்தில் அக்ஷய பாத்ரா ஒரு முக்கிய பங்காளியாகவும் உள்ளது, இத் திட்டத்திற்கு முக்கிய பரோபகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்தில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனர் மிலிந்த மொரகொட மற்றும் அக்ஷய பாத்ரா தலைவர் ஸ்ரீ மது பண்டிட் தாசா இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைப் பாடசாலைகளில் ஒரு முன்னோடித் திட்டமாக மதிய உணவு முயற்சியைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்திருந்தனர்.
புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளை கொழும்பில் ஒரு மாதிரி பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதோடு அக்ஷய பாத்ரா உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்திற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தில் MMBL பாத்ஃபைண்டர் குழுமத்தின் இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. பாலசுந்தரம் மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டனர். அக்ஷய பாத்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகள் சஞ்சலாபதி தாசா மற்றும் சிவா சுவீர் சன்நிதி ஆகியோர் ஸ்ரீ கிருஷ்ணாவின் வளர்ப்பிடமான விருந்தாவனிலிருந்து மெய்நிகர் முறையில் கையெழுத்திட்டனர்.
0 Comments
No Comments Here ..